Home நாடு மஇகா தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன

மஇகா தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன

954
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலில் கண்ட வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து மஇகா கட்சியினரிடையே சோர்வும், அவநம்பிக்கையும் பரவியிருந்தாலும், நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தல்கள் பல தரப்பினருக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

முதல் கட்டமாக கிளைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் பின்னர், தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று புதிய தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி கட்சியில் பல்வேறு மாற்றங்களுக்கான அடிப்படை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி நிர்வாக மாற்றமாக, மஇகா தலைமைச் செயலாளராக டத்தோ அ.சக்திவேலுவுக்குப் பதிலாக டத்தோ எஸ்.எஸ்.இராஜகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார். மஇகா நிர்வாகச் செயலாளராக டத்தோ முனியாண்டி நியமனம் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்டமாக தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மூன்று தவணைகளுக்கும் மேலாக தொகுதித் தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் எனப் புதிய தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல தொகுதிகளின் தலைவர்கள் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பல தொகுதிகளில் காலியாகும்  தலைமைப் பொறுப்புகளுக்கு போட்டிகள் ஏற்பட்டுள்ளன. தொகுதித் தலைவராக தொடர்ந்து நீடிக்கும் சில தொகுதித் தலைவர்களை எதிர்த்தும் போட்டிகள் உருவாகியுள்ளன. பல தொகுதிகளில் போட்டிகள் உருவாகியிருப்பது மஇகா மீது அதன் உறுப்பினர்களும், தொண்டர்களும் இன்னும் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய சட்டத் திருத்தங்களின் காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே போட்டிகள் நடைபெறும். வேட்புமனுத் தாக்கல்கள் விரைவில் நடைபெறவிருப்பதால், பல தொகுதிகளில் இரு தரப்பு அணிகளுக்கிடையே தீவிரப் பிரச்சாரங்களும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்ததும், மாநிலப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும். அதன் பின்னர் தேசியத் துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களும் இளைஞர், மகளிர், புத்திரா, புத்திரி பிரிவுகளுக்கான தேர்தல்களும் நடைபெறும்.

-இரா.முத்தரசன்