கோலாலம்பூர் – தேசிய முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குநராக டத்தோ ஷாரில் ரிட்சா ரிட்சுவான் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகியுள்ள டான்ஸ்ரீ அஸ்மான் மொக்தாருக்குப் பதிலாக அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 20 முதல் அவர் அதிகாரபூர்வமாக இந்தப் பதவியில் பணியைத் தொடக்குவார்.48 வயதான டத்தோ ஷாரில் தற்போது இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 16 ஏப்ரல் 2013 முதல் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு எம்ஆர்சிபி (MRCB) நிறுவனத்திலும், மற்ற சில நிறுவனங்களிலும் அவர் பொறுப்புகள் வகித்திருக்கிறார். கோலாலம்பூர் போக்குவரத்து மையமான கேஎல் சென்ட்ரல் வளாகத்தின் நிர்மாணிப்பில் ஷாரில் முக்கியப் பங்காற்றினார்.
ஒரு வழக்கறிஞரான அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
பிரதமர் துன் மகாதீர் கசானாவின் நிர்வாக வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலியும் கசானாவின் வாரிய இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டான்ஸ்ரீ முகமட் ஹசான் மரிக்கான், டாக்டர் சுக்டேவ் சிங், கோ சிங் இன் ஆகியோரும் கசானாவின் வாரிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.