Home One Line P2 கசானா நேஷனல் பெர்ஹாட் சாதனை : 2018-இல் 6.27 பில்லியன் இழப்பு; 2019-இல் 7.36 பில்லியன்...

கசானா நேஷனல் பெர்ஹாட் சாதனை : 2018-இல் 6.27 பில்லியன் இழப்பு; 2019-இல் 7.36 பில்லியன் இலாபம்

687
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் அரசாங்க நிதிகளைக் கையாளும் முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் பெர்ஹாட் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, மிகச் சிறப்பான இலாபத்தை 2019-இல் அடைந்ததாக தெரிவித்திருக்கிறது.

2018-இல் 6.27 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்த கசானா 2019-இல் சிறப்பான நிர்வாகத்தினால் 7.36 பில்லியன் ரிங்கிட் இலாபத்தை ஈட்டியுள்ளது.

தங்களின் முதலீட்டின் மூலம் கிடைத்த இலாப ஈவு மற்றும் சில சொத்துகளை விற்றதனால் கிடைத்த வருமானம், குறைவான வணிகத் தடைகள் ஆகியவை காரணமாக இந்தக் கூடுதல் இலாபம் கிடைக்கப் பெற்றதாக கசானாவின் நிர்வாக இயக்குநர் ஷாரில் ரிட்சா ரிட்சுவான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2018-இல் சொத்துகளை விற்றதன் மூலம் 1.4 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்தது. ஆனால், 2019-இல் இது 9.9. பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

இதன் காரணமாக, 2019-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 1 பில்லியன் ரிங்கிட்டை கசானா வழங்குகிறது.

செலவினங்களைக் குறைத்ததன் காரணமாகவும் கசானாவில் நிதி நிலைமை மேலும் வலுவடைந்திருக்கிறது. 2018-இல் 674 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த செலவினங்கள், 2019-இல் 484 மில்லியனாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

2018-இல் 55.2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த கடன்கள், 45.8 பில்லியன் ரிங்கிட்டாக – அதாவது 17 விழுக்காடு – 2019-இல் குறைக்கப்பட்டது.

31 டிசம்பர் 2019 முடிவடைந்த நிதியாண்டில் கசானாவின் மொத்த சொத்து மதிப்பு 73.1 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என்றும் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.