புத்ரா ஜெயா – பிரதமர் பதவியேற்றுக் கொண்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 2) இரவு முதன் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழி டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆற்றிய உரை, மக்களிடையே எழுந்திருக்கும் பல சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் திருப்திகரமாக அமைந்தது எனலாம்.
“மக்களிடம் ஒரு முறையீடு” என்ற தலைப்பிலான அவரது உரை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பானது.
எனினும், பின்கதவு அரசாங்கம் என்ற தோற்றத்தில் – அதுவும் பொதுத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட கட்சிகளுடன் அவர் அமைத்திருக்கும் – கூட்டணி, மீதான கறை இன்னும் துடைக்கப்படவில்லை.
அடுத்தடுத்து அவர் மேற்கொள்ளும் செயல்களால்தான் அந்தக் கறையை நீக்க முடியும் என்றும், வெறும் தொலைக் காட்சி உரைகளால் மட்டும் மக்களை தொடர்ந்து திருப்திப் படுத்த முடியாது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மொகிதின் வழங்கிய தொலைக்காட்சி உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- திறன்வாய்ந்த, நேர்மையான, தூய்மையான அமைச்சர்களை நியமனம் செய்வேன் என்ற உறுதியை வழங்குகிறேன்.
- தூய்மையான, ஊழல் அற்ற, நேர்மையான அரசாங்கம் அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நான் அறிந்திருக்கிறேன்.
- நேர்மையான செயல்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில், ஊழலை ஒழிப்பது, அதிகார விதிமீறல்கள் ஆகியவற்றை செயல்படுத்த அமுலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும், நடைமுறைகளையும் திருத்துவேன்.
- மக்களின் நிதித் தேவைகளையும் பிரச்சனைகளையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
- சுகாதார சேவைகள், கல்வி, நாட்டின் வளத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் 2030 திட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- யாரையும் நான் எதிர்க்க விரும்பவில்லை. உண்மையிலேயே நான் பிரதமராக விரும்பவில்லை. எனது உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள சில விளக்கங்கள் தர விரும்புகிறேன்.
- இரண்டு பிரதமர் வேட்பாளர்களுக்கும் பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால்தான் நான் நாட்டின் நிலைமையக் காப்பாற்ற பிரதமராக முன்வந்தேன்.
- முதலில் நாங்கள் அனைவரும் மகாதீருக்கே ஆதரவு தந்தோம். ஆனால், மற்ற மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை மகாதீரால் பெற இயலவில்லை. பிப்ரவரி 28 தேதியிட்ட மாமன்னரின் அரண்மனைக் கடிதமும் இதனை விளக்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் மாமன்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, மக்களவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கக் கூடிய பிரதமர் வேட்பாளரை முன்மொழியும்படி கேட்டுக் கொண்டார்.
- நிலைத் தன்மையான, அமைதியான, வளமான, அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையைத் தரக் கூடிய நாட்டையே மலேசியர்கள் விரும்புகிறார்கள்.
- எனவே, 2030 திட்டத்திற்கு முன்னுரிமை தருவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கு எனது அரசாங்கம் பாடுபடும்.
- எனவே நமது நாட்டை மீண்டும் நிர்மாணிக்கவும், அதன் முந்தைய உயர்ந்த நிலையை மீண்டும் கொண்டு வரவும் என்னுடன் இணையுமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
- எனது இதயத்தையும், ஆன்மாவையும் நாட்டுமக்களுக்குப் பணியாற்ற அர்ப்பணிக்கிறேன்.
- துன் மகாதீரின் சேவைகளுக்கும் தியாகங்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.