சென்னை – (மலேசிய நேரம் காலை 8.05 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை மாலை காலமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து அவசரச் சிகிச்சை ஊர்தியின் (ஆம்புலன்ஸ்) மூலம் அவரது கோபாலபுரம் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முன்னிரவு 1.00 மணிவரை அவரது நல்லுடல் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டு அவரது உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர், அவரது நல்லுடல் அவரது இரண்டாவது மனைவி ராசாத்தி அம்மாள் இல்லமான சி.ஐ.டி. காலனி இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாலை 5.00 மணிவரை குடும்பத்தினர் மற்றும் பிரமுகர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து அவரது நல்லுடல் இராஜாஜி அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு (இந்திய நேரம்) அரங்கத்தை வந்தடைந்தது. இங்கு பிரமுகர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது நல்லுடல் வைக்கப்பட்டிருக்கும்.
அதன் பிறகு அவர் எங்கு நல்லடக்கம் செய்யப்படுவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில சட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.