Home வணிகம்/தொழில் நுட்பம் “உத்துசான் மலேசியா” பத்திரிக்கைக்கு வணிக நெருக்கடி

“உத்துசான் மலேசியா” பத்திரிக்கைக்கு வணிக நெருக்கடி

1012
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு காலத்தில் அம்னோவின் குரலாக – மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஊடகமாக – மலாய் வாசகர்களிடையே வெற்றிகரமாக உலா வந்த நாளிதழ் உத்துசான் மலேசியா. அம்னோ கட்சியின் ஆதரவுடன் வணிக ரீதியில் வெற்றிகரமாக இயங்கி வந்த இந்தப் பத்திரிக்கை பின்னர் இதன் உரிமையாளர்களான உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக மலேசியப் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

எனினும் அதன் ஒருசார்புத் தன்மையினாலும், அம்னோவுக்கு எதிராகத் திரண்ட மலாய் சமூகத்தினரின் ஆதரவு குறைந்த காரணத்தினாலும் அந்தப் பத்திரிக்கை நாளடைவில் விற்பனையில் பெருமளவில் வீழ்ச்சி கண்டது. இருப்பினும் அம்னோவின் ஆதரவுடன் அந்தப் பத்திரிக்கை தொடர்ந்து தனது வணிக நிலைமையை சமாளித்து வந்தது. அதற்கான முக்கியக் காரணம் நாட்டின் மலாய் பள்ளிகளில் அந்தப் பத்திரிக்கை இலவசமாக வழங்கப்படுவதற்கு அதற்கான செலவினங்களை அரசாங்கமே ஏற்றுக் கொண்டதாகும்.

ஆனால், மே 9 பொதுத் தேர்தல் உத்துசான் மலேசியாவின் தலைவிதியையும் மாற்றியமைத்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய பக்காத்தான் அரசாங்கம் மலாய் பள்ளிகளுக்கு உத்துசான் மலேசியா பத்திரிக்கையை இலவசமாக வழங்கும் நடைமுறையை இரத்து செய்தது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, அண்மையில் பேங்க் முவாலாமாட் மலேசியா மற்றும் மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் ஆகிய வங்கிகளிடம் பெற்ற கடன்களுக்காக மாதா மாதம் செலுத்தும் தொகைகளைச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைமைக்கு ஆளானது உத்துசான் மலாயு நிறுவனம்.

மலேசியப் பங்கு சந்தையில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் தற்போது இருக்கிறது உத்துசான் மலாயு நிறுவனம். கடன்களைச் செலுத்த முடியாத நிறுவனமாக பிஎன்17 (PN 17) என்ற அடையாளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கிறது இந்த நிறுவனம். இதற்குப் பொருள் பங்குச் சந்தையில் இடம் பெற்றிருக்கும் இந்த நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் தனது கணக்குகளையும் நிதி நிலைமைகளையும் சரிசெய்ய வேண்டும் – இல்லாவிட்டால் பங்குச் சந்தையில் இருந்து அகற்றப்படும் – என்ற எச்சரிக்கையே பிஎன்17 என்ற அடையாளம்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிய இதுவரையில் 71 மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது உத்துசான் மலாயு நிறுவனம்.

எனவே, எதிர்காலத்தில் – அதாவது அடுத்த 12 மாதங்களில் யாராவது முதலீடு செய்து உத்துசான் மலேசியா பத்திரிக்கையைக் காப்பாற்றாவிட்டால் அந்தப் பத்திரிக்கை மூடுவிழா காணும் அளவுக்கு அதன் நிதி நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.