Home நாடு “பாஸ் – ம.இ.கா உறவானது, ஒரு தற்கொலை முயற்சியா?” – சேவியர் கேள்வி

“பாஸ் – ம.இ.கா உறவானது, ஒரு தற்கொலை முயற்சியா?” – சேவியர் கேள்வி

487
0
SHARE

கோலாலம்பூர் – எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஸ் கட்சி அண்மையில் மஇகாவோடு பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி வைக்க முற்பட்டிருப்பது குறித்து பிகேஆர்  கட்சியின் தேசிய உதவித்தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

“ஸ்ரீ செத்தியா இந்திய வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சியடைந்தவர்கள், உரிமைக்கும், உண்மைக்கும் குரல் கொடுப்பதில் வல்லவர்கள், இந்த இரு கட்சிகளின் கூட்டு அங்குள்ள இந்திய வாக்காளர்களைக் கவராது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஹலிமி அபுபக்கார், சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவர். ஓர் உள்ளூர்வாசி என்பதுடன் முன்னால் மாநகராட்சி மன்ற உறுப்பினர். தொகுதி மக்களிடையே நல்ல தொடர்பு கொண்டவர் என்பதால் எல்லா மக்களும் மிகச் சுலபமாக அவரை அணுகலாம் என்பதால் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றும் சேவியர் தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி கேட்டுக் கொண்டார்.

“முன்பு கம்போங் லிண்டோங்கான் மற்றும் கம்பம் கின்னஸ் போன்ற இடங்களில் சொந்த வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த மக்களை, குறிப்பாக இந்தியர்களை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்தது முன்னாள் பாரிசான் அரசாங்கம். அரசாங்கத் தரிசு நிலங்களை இந்தியர்களிடமிருந்து அபகரித்து, தங்கள் சொகுசு வாழ்வுக்குத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்த அம்னோவின் செயலை மறக்க மாட்டார்கள் அங்கு வாழும் மக்கள்” என்றும் சேவியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

PAS Logo“பல ஏக்கர் தரிசு நிலங்களை மீட்டு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய பாரிசான், இந்தியர்களின் பொதுத் தேவைகளான ஆலயம், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கூட நிலம் வழங்குவதில் வஞ்சனையை, கருமித்தனத்தைக் காட்டியது. அக்கட்சியின் சுய ரூபத்தை, அன்றே நம்மவர்கள் விளங்கிக் கொண்டார்கள். அம்னோ அங்குள்ள மக்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே செய்த கேடுகளுக்கு, மக்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதனால் அக்கட்சி நாடாளும் அதிகாரத்தை மட்டும் இழக்காமல், இந்த இடைத்தேர்தலில் இத்தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தக் கூடத் தகுதியற்றது என்பதை உணர்ந்து, இந்த இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு பாஸ் கட்சி போட்டியிடுகிறது. அம்னோ, பாஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ம.இ.கா தலைவர்கள் ஒன்று சேர்ந்து பாஸ் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று தங்களின் ஆதரவை வலியத் தெரிவித்திருப்பதன் நோக்கம், ம.இ.கா உறுப்பினர்களுக்கே விளங்கவில்லை” என்றும் சேவியர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்நாட்டு முஸ்லிம் அல்லாத மக்களின் பொது உரிமைக்கு எல்லாக் காலத்திலும் எதிராகச் செயல் பட்டதால், தேசிய முன்னணியை விட்டு மட்டுமன்றி, பக்காத்தான் கூட்டணியை விட்டும் விலக்கப்பட்ட கட்சி பாஸ் என்றும் சுட்டிக் காட்டிய சேவியர், குழந்தைகள் மதம் மாற்றம் தொடர்பான ஈப்போ இந்திராகாந்தி வழக்கு வெற்றிக்குப்பின், நாடாளுமன்றத்தில் RUU 355 திருத்த மசோதாவை முன் நிறுத்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடும்ப மசோதாவிற்கு (கணவன் மனைவி இரு பாலரின் ஒப்புதல் இன்றி மதம் மாற்றும்), எதிராகக் குரல் கொடுத்த கட்சி பாஸ் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“தாய்மார்களின் உரிமை மீது, சிறு பிள்ளைகளிடம் தாய்மார்கள் கொண்டுள்ள பாச, இரத்த உறவுகளை நிர்முலமாக்கும் வாதங்களுக்குத் துணைபோகும் மதத் தீவிர வாதிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மாதிரி வாதங்களுக்கு இந்நாட்டில் இடமே இல்லை என்பதனை உணர்த்தும் விதத்தில் ஒவ்வொரு ஸ்ரீ செத்தியா வாக்காளரும் பாஸ் கட்சிக்கு எதிராகவும், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாகவும் வாக்களிக்க வேண்டும்” என்றும் சேவியர் ஜெயக்குமார் ஸ்ரீ செத்தியா வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

“அம்னோ துணையின்றி ம.இ.காவுக்கு அரசியல் எதிர்காலமில்லை என்பதால், அதற்கு ஒரு பற்றுக்கோல் தேவைப்படுகிறது, அது ஒரு குட்டிச்சுவராக இருந்தாலும், அதை அந்தக் கட்சி பற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 1எம்டிபி விவகாரத்தில் ம.இ.காவும் பாஸ் கட்சியும் கூட்டு என்பதால் இனி எவரிடமும் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது. அவர்களை நம்பி எப்படி ஓட்டுப் போடுவார்கள்?” என்றும் சேவியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments