சென்னை – ஒரு காலத்தில் தமிழ்ப் படப் பாடல்களுக்கான இசைத்தட்டு விற்பனைகள் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இத்தகைய தமிழ்ப் படப் பாடல்கள் இணையம் வழி பதிவிறக்கம் செய்யப்பட்டு இரசிகர்கள் கேட்டு மகிழும் நடைமுறை உருவாகியுள்ளது.
படத்தின் பாடல்களை படக் குழுவினரே இணையத்தில் இலவசமாக வெளியிடும் போக்கும் தற்போது பெருகியுள்ளது. இந்நிலையில் இதுவரையில் வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக அளவுக்கு படப் பாடல்கள் செவிமெடுக்கப்பட்ட படமாக விஜய் நடித்த மெர்சல் திகழ்கிறது.
மெர்சல் படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமை பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், 350 மில்லியனைத் தொட்ட தமிழ்ப் பாடல்களைக் கொண்ட தமிழ்ப் படம் மெர்சல் என அண்மையில் தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடல் அண்மையக் காலமாக தமிழர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. பட்டி தொட்டிகளிலெல்லாம் பிரபலமான இந்தப் பாடலோடு மற்றப் பாடல்களும் இரசிகர்களைக் கவர்ந்திருந்தன.
மெர்சல் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.