ஜாகர்த்தா – (மாலை 5.00 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முக்குளிப்பு வீரர்களால் தொடரப்பட்டு வரும் வேளையில், அந்த விமானம் எப்படி விழுந்திருக்கலாம் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.
காரணம், அது புதியதொரு விமானமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டுதான் அது பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த விமானத்தை இயக்கிய விமானி இந்திய நாட்டு குடியுரிமை பெற்ற – புதுடில்லியைச் சேர்ந்த – பவ்யே சுனேஜா என்பவர் (படம்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் அவரது துணை விமானியும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் விமானத்தைச் செலுத்திய அனுபவம் வாய்ந்தவர்களாவர்.
இதே விமானம் கடந்த முறை சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அதில் தொழில் நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், எனினும் அவை நடைமுறைப்படி சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எந்தக் காரணத்தினால் அந்த விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற மர்மம் எழுந்துள்ளது.
ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த விமானம் கடலுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் சில மட்டும் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர். வானிலை மற்றும் மோசமான மேகமூட்டம் காரணமாகவோ, தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் போயிங் (Boeing 737 MAX 8) ரக விமானமாகும். இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற ஈயச் சுரங்கங்களை மையமாகக் கொண்ட நகரை வந்தடையவிருந்தது.