பெங்களூரு – கன்னடப் படவுலகின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் என பல அரசியல் முகங்களைக் கொண்டவருமான அம்பரீஷ் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 24) பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சினிமா, அரசியல் என அனைத்துத் தரப்புகளில் இருந்தும் அவருக்கு அனுதாபச் செய்திகள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநில அரசாங்கம் அம்பரீஷூக்காக மாநில அளவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். அம்பரீஷ் அனைவராலும் விரும்பப்பட்ட புரட்சியாளர் எனவும் குமாரசாமி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.
அம்பரீஷ் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். சில தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்தார். தமிழ்த் திரையுலகில் பல நட்சத்திரங்களுடன் அவர் நெருக்கமான நட்பு பாராட்டினார். அவரது மனைவி சுமலதாவும் அந்தக் காலத்தில் பிரபலமான தமிழ் நடிகையாவார்.
66 வயதான அம்பரீஷூக்கு மலேசியாவிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றனர். அடிக்கடி மலேசியா வந்திருக்கும் அவர் இங்கு பல நிகழ்ச்சிகளிலும், தனது நண்பர்களின் இல்லத் திருமணங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
1972-ஆம் ஆண்டில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்ற அம்பரீஷ் பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். கர்நாடகா மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரீஷ் கன்னட சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் அந்த மண்டியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கும் அவர் சிறிது காலம் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அம்பரீஷின் இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மண்டியா மாவட்டத்திலிருந்து அம்பரீஷுக்கு இறுதி மரியாதை செலுத்த வரும் இரசிகர்களுக்கென சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த மாவட்டத்தில் அவருக்கு நினைவகம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.