பெங்களூரு – காங்கிரஸ் ஆட்சிசெய்து வரும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் காரணமாக, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் ஒரேயடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்களில் நடிகரும், வீடு வசதிவாரிய அமைச்சர் பதவியில் இருந்தவருமான அம்பரீஷ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் வகையில், தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
அம்பரீஷ் (படம்) கர்நாடக மாநிலத்தில், முன்னணி கன்னடப் படவுலக கதாநாயகனாவார்.
இருந்தாலும் தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை எனக் கூறியுள்ளஅம்பரீஷ், “நான் ஏற்கனவே 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். முதல்வர் சித்தராமையா என் பதவியை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமெனக் கேட்டிருந்தால், நான் தாராளமாக விட்டுக் கொடுத்திருப்பேன்” என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் அரசியல் போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.