Home இந்தியா ஆபாசக் காணொலி : ரேவண்ணாவின் தந்தை கைது

ஆபாசக் காணொலி : ரேவண்ணாவின் தந்தை கைது

392
0
SHARE
Ad
பிரஜ்வால் ரேவண்ணா

பெங்களூரு : கர்நாடக பிரதேச மாநிலத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் தேர்தல் விவாதமாக உருவெடுத்திருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர் ரேவண்ணா பிரஜ்வால் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொலிகள்.

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணாவை போலீசார் நேற்று சனிக்கிழமை (மே 4) கைது செய்தனர்.

அவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு ரேவண்ணாவை நேற்று கைது செய்தனர். பிரஜ்வல் மற்றும் எச்டி ரேவண்ணா இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய ஆபாசக் காணொலிகள் போலியானவை என ரேவண்ணா கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தளம் தொடர்ந்து கூறி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இந்தியக் காவல் துறை இண்டர்போல் என்னும் அனைத்துலகக் காவல் துறையில் எச்சரிக்கை முன்னறிவிப்பு (லுக்அவுட் நோட்டீஸ்) வழங்கியிருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் தவிர்த்து 3-வது பெரிய கட்சியாக வலம் வருவது மதச்சார்பற்ற ஜனதா தளம். குமாரசாமி தலைமை தாங்கும் கட்சி. இவரின் தந்தையார் தேவகவுடா ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். 91 வயதிலும் சளைக்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் பாஜக கூடுதலாக சில தொகுதிகளை வெல்லலாம் என்பது சிலரின் ஆரூடம்.

இந்த சூழ்நிலையில்தான் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச காணொலிகள் வெளியாகி கர்நாடக அரசியலைக் கலக்கி வருகின்றன. இந்த முறையும் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார் ரேவண்ணா.

28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்ட வாக்களிப்பு நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்களிப்பு நடைபெற்ற ஏப்ரல் 26-ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு மட்டும் வாக்களிப்பு. அன்று ஹாசன் தொகுதிக்கு வாக்களிப்பு நடந்து முடிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள் ரேவண்ணா நாட்டை விட்டு ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவின் எஞ்சிய 14 தொகுதிகளுக்கு எதிர்வரும் மே 7-ஆம் தேதி மூன்றாவது கட்டத் தேர்தலின்போது வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணாவின் ஆபாசப் பட விவகாரம் வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேவண்ணா சார்ந்திருக்கும் ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அது பின்னடைவைக் காணலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பாஜக ரேவண்ணாவைப் பாதுகாக்கிறது என்றும் அவரின் தூதரக நிலையிலான கடப்பிதழை (டிப்ளோமாடிக் பாஸ்போர்ட்) பாஜக அரசாங்கம் முடக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரேவண்ணா ஆபாசப் படங்கள் குறித்த விசாரணையை தனிப்படை ஒன்று விசாரித்து வருகிறது.