சென்னை – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை இந்த விவகாரத்தை அவசர வழக்காகச் சமர்ப்பித்து நீதிமன்றத்தை நாடிய விஷால் தரப்பினருக்கு சட்டரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சங்க அலுவலகத்திற்கு அரசு அதிகாரிகளால் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விஷால் தரப்பினர் தி.நகர் அலுவலகத்திற்கு வந்து அங்கு சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்து அகற்றினர்.
விஷாலைக் கைது செய்ததற்கும் நீதிமன்றம் காவல் துறையினருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷாலைத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குள் அனுமதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட யார் அதிகாரம் கொடுத்தது? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் மூலமாகவே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
சங்கங்களின் துணை பதிவாளரிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும் இரண்டு தரப்புகளுக்கும் நீதிபதி ஆணையிட்டார்.