கொழும்பு: அக்காலம் தொட்டே, இலங்கையில் இந்து மதம் கால் பதித்திருந்ததற்கான சாட்சியங்களை, அங்கு நிறுவப்பட்ட இந்து ஆலயங்கள், வழிபாடுகள் வழி அறியலாம். குறிப்பாக அப்போதைய மன்னர்கள் சிவ வழிபாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியிருந்ததாக வரலாற்றுக் கூறுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொழும்புவின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ள, முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமொன்று, இலங்கை தொல்பொருள் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சிவனின் வடிவமான பைரவரை மூலக் கடவுளாக கொண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பழைமையான வரலாற்று சான்றுகளை கொண்ட இந்த ஆலயம், தற்போது அடித்தளத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஆலயம் தற்போது, முழுமையாக, பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகம் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.
அதற்கு ஆதாரமாக, இந்த ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் புத்தப் பெருமானின் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது. இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில், பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருக்கின்றன என சமூகப் பக்கங்களில் படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள், ஆலயத்தை பராமரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.