Home உலகம் இலங்கை: முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்!

இலங்கை: முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்!

698
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அரசாங்க  அமைச்சர்கள்  தமது பதவிகளிலிருந்து விலகி உள்ளனர். நேற்று திங்கட்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹாக்கீம் தெரிவித்தார்.

நாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காகவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பதற்காகவுமே இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொண்டு, அந்த பாதகத்தைச் செய்திருப்பதால், பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை முற்றாக ஒழிக்கும் படி தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ரவூப் ஹாக்கீம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள வன்முறைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையிலும் வெறுப்பு பேச்சுகளை கக்குவோர் வன்முறைகளை தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெரிய அளவிலான வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த பதவி விலகலின் ஊடாக, தாங்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருதக்கூடாது எனவும் ரவூப் ஹாக்கீம் கூறியுள்ளார்.