கொழும்பு : தமிழ் நாட்டிலிருந்து அடிக்கடி பிரபல எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியாவுக்கு அழைத்து அவர்களை மேடையேற்றி உரையாற்றச் செய்து அழகு பார்ப்பவர்கள் மலேசியர்களாகிய நாம்!
ஆனால், மலேசியாவிலிருந்து ஓர் அரசியல்வாதி – ஒரு தமிழர் – அவரின் இலக்கிய அறிவுக்காகவும், தமிழ் மொழியின் மீதான உணர்வுக்காகவும் – மேடைப் பேச்சு ஆற்றலுக்காகவும் – வெளிநாடுகளில் உரையாற்ற அழைக்கப்படுகிறார் என்றால் அது டத்தோஸ்ரீ சரவணன்தான்! தன் அரசியல் பணிகளுக்கு இடையில் மற்ற நாடுகளில் நடக்கும் தமிழ் இலக்கிய விழாக்களில் அழைப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறாது கலந்து கொண்டு உரையாற்றுபவர் சரவணன்.
அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 14 முதல் 17 வரை நடைபெறும் கொழும்பு கம்பன் விழாவில் சிறப்பு விருந்தினராக சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான அவர் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13) கோலாலம்பூரிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் 4 ஆண்டுகளுக்குப் பின் மலரும் கம்பன் விழா மிகவும் விமரிசையாக, உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களின் வருகையால் களைகட்டவிருக்கிறது.
கொழும்பு கம்பன் விழாவில் சரவணன் கலந்து கொள்வது இது மூன்றாவது முறையாகும். 2016 மார்ச் மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில் சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சராகப் பதவி வகித்தார்.
அதன் பின்னர் 2020-இல் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நடைபெற்ற கொழும்பு கம்பன் விழாவிலும் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கிய உரை நிகழ்த்தினார்.