சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசிய நடிகர் ராதாரவியை, திமுகவிலிருந்து, கட்சி தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கிடையில், ராதாரவியின் அக்கூற்றுக்கு பலர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘பில்லா 2’ திரைப்பட இயக்குனர், சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான “கொலையுதிர் காலம்” என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், ராதாரவி நயன்தாரா ஒரு சிறந்த நடிகை எனக் கூறி, பின்பு, அவரைப் பற்றி வெளிவராத செய்திகளே கிடையாது எனவும், பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார் எனப் பேசியுள்ளார். முன்பு மாதிரி எல்லாம் இல்லை, தற்போது யார் வேண்டுமானாலும் ‘இறைவன்’ வேடத்தில் நடிக்கலாம் எனக் கூறி, அப்பாத்திரத்தில் உள்ளவர்கள் கும்பிடும்படியும், கூப்பிடும்படியும் உள்ளார்கள் என இழிவாகப் பேசியுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த நடிகர் ராதாரவி, தனது கருத்தானது, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.