கோலாலம்பூர்: தேர்தல் ஆணைய தரவுதளத்தில் உள்ள வாக்காளர்களின் தகவல்கள் பாதிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, மக்கள் தங்களின் தகவல்கள், வாக்காளர் பதிவு தளத்தில் காணவில்லை என பரவலாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். முன்னாள் பிரதமர் நஜிப்பும் இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தொழில்நுட்ப சிக்கலினால் இந்த சூழ்நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். நேற்றிரவு 8.00 மணி தொடங்கி மீண்டும் அத்தளங்கள் எப்போதும் போல செயல்படத் தொடங்கிவிட்டன என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியபடி வாக்காளர் தரவுத்தளத்தில் ஏற்பட்ட கோளாறோ அல்லது ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களை வாக்களிக்க நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் எதுவுமில்லை என அவர் தெரிவித்தார்.