Home நாடு மக்கோத்தா இடைத் தேர்தல்: ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்!

மக்கோத்தா இடைத் தேர்தல்: ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர்!

187
0
SHARE
Ad
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து விளக்கமளிக்கிறார் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருண்

புத்ரா ஜெயா: ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா  சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக செப்டம்பர் 28ஆம் தேதியை மலேசியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருண், வேட்புமனுத் தாக்கல் நாளாக செப்டம்பர் 14ஆம் தேதியையும், முன்கூட்டிய வாக்குப்பதிவு 24ஆம் தேதியில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

“இந்த இடைத்தேர்தலுக்கான செலவு சுமார் RM2.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்றும் அவர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜோகூரின் மக்கோத்தா மாநில சட்டமன்றத் தொகுதி, அம்னோவைச் சேர்ந்த அதன் உறுப்பினர் ஷரீஃபா அசிசா சைட் ஜெயின் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து காலியானது.

2022 ஜோகூர் மாநில தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட திய ஷரீஃபா, நான்கு முனைப் போட்டியில் தனது போட்டியாளர்களை 5,166 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஷாரிபா அசிசா சைட் ஜைன்

அந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட அமானா கட்சி மீண்டும் அந்தக் கட்சியில் போட்டியிட வேண்டும் என மாநில அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும் அமானா தலைவர் முகமட் சாபு  மக்கோத்தா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேசிய நிலையிலான கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

இதற்கிடையில், மக்கோத்தா தொகுதியில் அம்னோ போட்டியிடுவதை உறுதிப்படுத்தியிருக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி, ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளர் அங்கு போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.