Home நாடு நெங்கிரி இடைத் தேர்தல் : பரபரப்பு காணப்படவில்லை!

நெங்கிரி இடைத் தேர்தல் : பரபரப்பு காணப்படவில்லை!

254
0
SHARE
Ad
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது சாஹிட் ஹாமிடி, துங்கு ரசாலி ஹம்சா

குவா மூசாங் : பொதுவாக மலேசியாவில் இடைத் தேர்தல்கள் என்றால் ஒரு பரபரப்பும் ஆர்வமும் இருக்கும். ஆனால் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அத்தகைய சூழல் இல்லை. காரணம், கிளந்தானில் இருக்கும் நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி எளிதாக வென்று விடும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

இருப்பினும் இங்கு போட்டியிடும் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா நீண்ட காலமாகத் தற்காத்து வந்த குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் நெங்கிரி ஒன்றாகும். கடந்த 2022 பொதுத் தேர்தலில் துங்கு ரசாலி ஹம்சா பாஸ் வேட்பாளரிடம் குவா மூசாங் தொகுதியில் தோல்வியடைந்தார்.

தேசிய முன்னணிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நேரடிப் போட்டி இங்கு உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நெங்கிரி சட்டமன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி அபு நைம் 810 வாக்குகளில்தான் இங்கு வெற்றி பெற்றார். அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பெர்சாத்து கட்சியில் இருந்து ஜூன் 13-ஆம்  தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் 19-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பெர்சாத்து கட்சியின் சார்பில் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார். இவர் குவா மூசாங் தொகுதி பாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவராவார். அரச மலேசிய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இடைத் தேர்தலில் அவர் பாஸ் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த முடிவை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசின் தற்காத்துள்ளார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் முகமட் அசிசி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் அப்துல் அசிஸ் யூசோப்பைத் தோற்கடித்தார்.

நெங்கிரி சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும்.

2004 தொடங்கி இதுவரை நெங்கிரியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. 2023-இல் மட்டுமே பாஸ்-பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி வெற்றி பெற்றார்.

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் 9-வது இடைத் தேர்தல் இதுவாகும்.