Home நாடு நெங்கிரி : தேசிய முன்னணி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் அதிர்ச்சி வெற்றி!

நெங்கிரி : தேசிய முன்னணி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் அதிர்ச்சி வெற்றி!

606
0
SHARE
Ad
வெற்றிக் களிப்பில் அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி (இடது)

குவா மூசாங் : யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசிய அரசியலில் திருப்புமுனையாக அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது தேசிய முன்னணி. கிளந்தான் மாநிலத்தில் ஆளும் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறது. 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கிறது தேசிய முன்னணி.

தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி 9,091 வாக்குகள் பெற – பாஸ் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் 5,739 வாக்குகள் பெற்றார்.

மேலும் ஆச்சரியகரமான முறையில் 73.88 விழுக்காடு வாக்களிப்பு நெங்கிரி சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியிருக்கிறது. 135 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த வெற்றிக்குக் காரணம் அம்னோவின் தலைமைத்துவமா? துங்கு ரசாலி ஹம்சா பிரச்சாரத்திற்கு தலைமையேற்றதா? பிரதமர் அன்வாரின் அதிகரித்து வரும் செல்வாக்கா? முஹிடின் யாசின் தலைமையில் செல்வாக்கை இழந்து வரும் பெரிக்காத்தான் நேஷனல் கண்டு வரும் பலவீனமா? பாஸ் கட்சி செல்வாக்கை இழக்கிறதா? என பல்வேறு கேள்விகள் – விவாதங்கள் அடுத்து வரும் நாட்களில் தொடரும்.

கிளந்தான் மாநில சட்டமன்றத் தொகுதி ஒன்றில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் இடைத் தேர்தலில் தோற்கடிப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி அபு நைம் 810 வாக்குகளில்தான் இங்கு வெற்றி பெற்றார். அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பெர்சாத்து கட்சியில் இருந்து ஜூன் 13-ஆம்  தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் 19-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

பெர்சாத்து கட்சியின் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிட்டார். இவர் குவா மூசாங் தொகுதி பாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவராவார். அரச மலேசிய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இடைத் தேர்தலில் அவர் பாஸ் சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் முகமட் அசிசி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் அப்துல் அசிஸ் யூசோப்பைத் தோற்கடித்தார். இதற்கிடையில் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலை சட்டரீதியாக நிறுத்தும் நீதிமன்ற வழக்குகளில் முகமட் அசிசி தோல்வியடைந்தார்.

2004 தொடங்கி இதுவரை நெங்கிரியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. 2023-இல் மட்டுமே பாஸ்-பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது.