Home நாடு நெங்கிரி : வெற்றியை நோக்கி தேசிய முன்னணி!

நெங்கிரி : வெற்றியை நோக்கி தேசிய முன்னணி!

581
0
SHARE
Ad

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெற்ற நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய முன்னணி வெற்றியை நோக்கி நகர்வதாக ஊடகங்கள் தெரிவித்தன.

காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. மாலை 4.00 மணி வரையில் 72 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் சுமார் 60 விழுக்காட்டு வாக்களிப்பை எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி, தேசிய முன்னணி வெற்றி உறுதி செய்யப்படும் என இறைவன் அருளால் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

47 வாக்களிப்பு வரிசைகளில் 36 வாக்கு வரிசைகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி 2,800 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளந்தான் மாநில சட்டமன்றத் தொகுதி ஒன்றில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் இடைத் தேர்தலில் தோற்கடிப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் சார்பில் போட்டியிட்ட பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி அபு நைம் 810 வாக்குகளில்தான் இங்கு வெற்றி பெற்றார். அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பெர்சாத்து கட்சியில் இருந்து ஜூன் 13-ஆம்  தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதியும் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் 19-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

பெர்சாத்து கட்சியின் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிட்டார். இவர் குவா மூசாங் தொகுதி பாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவராவார். அரச மலேசிய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த இடைத் தேர்தலில் அவர் பாஸ் சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் முகமட் அசிசி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய முன்னணியின் அப்துல் அசிஸ் யூசோப்பைத் தோற்கடித்தார். இதற்கிடையில் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலை சட்டரீதியாக நிறுத்தும் நீதிமன்ற வழக்குகளில் முகமட் அசிசி தோல்வியடைந்தார்.

2004 தொடங்கி இதுவரை நெங்கிரியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. 2023-இல் மட்டுமே பாஸ்-பெர்சாத்து வேட்பாளர் முகமட் அசிசி வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் தேசிய முன்னணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.