(ஞாயிற்றுக்கிழமை 16 நவம்பர் 2025-ஆம் நாள் நடைபெற்ற மஇகாவின் 79-வது தேசியப் பொதுப் பேரவையில், தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவை மஇகா வரலாற்றுபூர்வ முடிவை எடுத்திருக்கும் நிலையில், அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக, மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நீண்டதொரு தலைமையுரையை நிகழ்த்தி மஇகா ஏன் தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது என்ற விளக்கங்களை வழங்கினார். அந்த உரையின் எழுத்து வடிவம் பேராளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த உரை பின்வருமாறு:)
அலையன்ஸ் கூட்டணியை நோக்கி தொடங்கிய நமது பயணம்
சுதந்திரத்திற்கு முன்பே, நமது மூதாதையர்கள் நம் நாட்டில் காலடி எடுத்து வைத்தார்கள். நமக்கான நாட்டுக் கொடியும், எல்லைகளும் வரையறுக்கப்படுவதற்கு முன்பே, அவர்கள் இந்த மண்ணில், கால் பதித்து விட்டார்கள். அது அவர்களாகத் தேர்ந்தெடுத்த பயணம் அல்ல. மாறாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவிலிருந்து அவர்களை இங்கே தருவித்து, அவர்களுக்குத் தெரியாத, புரியாத நிலங்களில் வேலை செய்வதற்காக, அகண்ட கடல் பரப்பைத் தாண்டி அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். மிகவும் கடுமையான உடல் உழைப்பைக் கொண்ட வேலைகளைச் செய்வதற்காகவும், வளர்ச்சி கண்டு வந்த இந்த நாட்டின் அடித்தளத்தை கட்டமைக்கவும் அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்கள் வரும்போது, அவர்கள் கைகளில் பொருட்களோ, பணமோ அதிகம் இல்லை. ஆனால், அவர்களிடத்திலேயே, நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உடல் வலிமையும், எதையும் தாக்குப் பிடிக்கும் தன்மையும், அவர்களின் இதயங்களில் பெருத்த நம்பிக்கையும் நிறைந்திருந்தன. அவர்கள் இங்கு வந்து, காட்டை அழித்தார்கள், ரயில் பாதைகளை அமைத்தார்கள், தோட்டப்புறங்களில் கடுமையாக பனியாற்றினார்கள். இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பை நிமிரச் செய்வதற்கு, வலிமைப்படுத்துவதற்கு, ஓய்வின்றி உழைத்தார்கள், தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள். அவர்கள் கட்டாயத்தாலோ, நெருக்குதலாலோ அவ்வாறு செய்யவில்லை. மாறாக, தங்களது தேவைகளுக்காகவும், தாங்கள் வாழ்க்கை அத்தியாவசியங்களுக்காகவும், துணிச்சலையும், நம்பிக்கையும் மனதில் கொண்டு அவர்கள் இந்தப் பணிகளைச் செய்தார்கள்.
நமது மூதாதையர்கள் எல்லாம், ஒரு நாள் வரும், நாம் அனைவரும் மீண்டும் தாய்நாடு திரும்புவோம் என்ற கனவுகளோடுதான் காத்திருந்தார்கள். ஆனால், நமக்கு முன்னால் மாறிய வரலாற்று காட்சிகள் வேறு விதமாக இருந்தன. நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அரசாங்கத்திற்கு, நம்மை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நோக்கம் இருந்ததில்லை. இதன் காரணமாக, நமது மூதாதையர்களுக்கும் அவர்களின் பூர்வீக கிராமங்களுக்கும் இடையிலான அவர்களின் பந்தம், தொடர்புகளுக்கான, இடைவெளிகள் தூரம் அதிகரித்துக்கொண்டே சென்றன. அதன் காரணமாக, அவர்கள் தங்களுக்கென புதிய வேர்களைத் தேடி, இங்கேயே ஆழமாக தங்களைப் பதிய வைத்துக் கொண்டார்கள். அன்போடும், மன உறுதியோடும், இந்த நிலத்தை தங்களின் தாய் மண்ணாக, தாய் நாடாக தழுவிக் கொண்டார்கள்.
அவர்கள் இங்கு வந்தது அதிகாரத்திற்காகவும், சலுகைகளுக்காகவும் அல்ல. தங்களுக்கென மரியாதையுடன் கூடிய, கௌரவத்துடன் கூடிய ஓர் வாழ்க்கை வேண்டும் என்ற வாய்ப்பைத் தேடித்தான், அவர்கள் இங்கு வந்தார்கள். சூழ்நிலைகள் அவர்களை இங்கேயே தங்க வைத்து விட்டன. அவர்கள் இங்கே தங்கியதற்குக் கைமாறாகக் கேட்டதெல்லாம், தங்களுக்கு வேலை செய்ய உரிமைகள் வேண்டும், தாங்கள் சார்ந்த மதத்தை வழிபாடு செய்ய ஆலயங்கள் வேண்டும், தங்களது குடும்பத்தினரை பாதுகாத்து வளர்க்க ஓர் வாழ்க்கை வேண்டும், தாங்கள் நிரந்தரமாக வாழ்வதற்கு ஓர் ஆதாரம் வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் செயல்பட்டார்கள். அதன் காரணமாக, இன்று நாம், நம் நாடு என்று பெருமையுடன், மகிழ்ச்சியுடன் கூறும் இந்த நாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக அவர்கள் இணைந்து கொண்டார்கள்.
அவர்கள் கடுமையாக உழைத்து, இந்த நாட்டில் சாலைகளை அமைத்தார்கள். ஆனால், அந்த சாலைகளில் பயணம் செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு கிடைத்ததில்லை. மிகப்பெரிய பள்ளிகளை அவர்கள் கட்டுவதற்கு தங்கள் உழைப்பை வழங்கினார்கள். ஆனால், அந்தப் பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. ரயில் பாதைகளை அமைத்தார்கள். ஆனால், அந்த ரயில் பயணங்களை மேற்கொள்ள அவர்களுக்கு வசதி இல்லை. இருப்பினும், அவர்களின் தொடர்ச்சியான உழைப்பினால், அந்த உழைப்பின் பலனால், அவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான ஓர் பிணைப்பு ஏற்பட்டது. அந்தப் பிணைப்பை எந்த சட்டங்களும் தீர்க்கமாக வரையறுக்க முடியாது. எந்த எல்லைக்கோடுகளும் அவர்களுக்கான பிணைப்பை நிர்ணயிக்க முடியாது.
இவ்வாறு, மிகவும் சாதாரணமான, ஆனால் யாராலும் பிரிக்க முடியாத, உடைக்க முடியாத, தொடக்கங்களோடு தொடங்கிய இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைப் பயணத்தில், தங்களின் உரிமைகளையும், இந்த நாட்டில் தங்களுக்கு என எதிர்கால நோக்கங்களையும், இலக்குகளையும் அடைவதற்கு, நமக்கென ஒரு குரல் வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். பல்லாண்டு கால உழைப்புகள், தியாகங்கள் – அவற்றுக்கு பிறகு, தங்களின் சிரமமான சூழ்நிலையில் இந்த நாட்டை தங்களின் தாய் நாடாக, வீடாக ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின்னர், மலாயா நாட்டை அவர்கள், தாங்கள் நாடு கடத்தப்பட்ட நாடு என்று கருதாமல், தங்களுக்கு உரிமையான, தங்களுக்கும் இங்கு பங்கு உண்டு என்று கருதும் அளவுக்கு இந்த நாட்டை பார்க்கத் தொடங்கினார்கள்.
ஆகஸ்ட் 1946 ஆம் ஆண்டில், மலாயன் இந்தியன் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது, அந்தக் கட்சி ஏதோ சலுகைகளைப் பெறுவதற்காகவோ, வசதி வாய்ப்புகளைப் பெறுவதற்காகவோ உருவாகவில்லை. மாறாக, ஓர் இலக்கு கொண்ட இயக்கமாக அந்தக் கட்சி பிறந்தது. இந்த நாட்டை உருவாக்கப் பாடுபட்ட அனைவருக்கும், இந்த நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கும் ஓர் உரிமையும், பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடங்கப்பட்டதுதான் மலாயன் இந்தியர் காங்கிரஸ்.
நமது கட்சியைத் தோற்றுவித்தவர்கள், மிகப் பிரமாதமான, சிறந்த முறையில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் அல்ல. மாறாக, அவர்கள் சாதாரண உடல் உழைப்பு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோரின் பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் மனசாட்சிப்படி, நமக்கான கௌரவம் என்பது, அதிகாரத்தினால் வருவதல்ல, நமது அரசியல் பலத்தால் வருவது என்பதை உணர்ந்தார்கள்.
1954 ஆம் ஆண்டில், அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பெரிக்காத்தான், அதாவது அலையன்ஸ் என்ற கூட்டணியைத் தோற்றுவித்தன. மூன்று இனங்களைக் கொண்ட அந்தக் கூட்டணிக்கு இருந்தது ஒரே ஒரு கனவுதான், ஒரே ஒரு இலக்குதான்.
1955-ஆம் ஆண்டில், அந்தக் கூட்டணி நமது நாட்டின் முதல் தேசியத் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தல் நடந்த 52 தொகுதிகளில் 51 தொகுதிகளில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணி வெற்றியின் மூலம், நமது சுதந்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும், அந்த வெற்றியின் வாசல்கள் திறந்து விட்டன.
1957 ஆம் ஆண்டில், துங்கு அப்துல் ரஹ்மான், துன் தான் செங் லோக், துன் வீதி சம்பந்தன் ஆகியோரின் தலைமைத்துவத்தில், அலையன்ஸ் கூட்டணி ஓர் கட்சியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. மலாயாவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும், சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலையில், துங்கு அப்துல் ரஹ்மான் தனது கரங்களை உயர்த்தி மெர்டேக்கா என ஏழு முறை முழக்கமிட்டார். அந்த ஒவ்வொரு முழக்கத்தின் எதிரொலியாக நம்மைப் பீடித்திருந்த, நம்மைக் கட்டிப் போட்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆட்சி தகர்ந்தது. சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் ஆன்மா புதிதாக பிறந்தது.
அந்த சுதந்திரம் என்பது ஓர் இனத்துக்கான பரிசு அல்ல. ஒரு கட்சியின் வெற்றியும் அல்ல. மாறாக, பிளவுபட்டிருந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தியதற்குக் கிடைத்த வெற்றியாகும். அச்சத்தை மீறி நம்பிக்கையை வளர்த்த வெற்றியாகும்.
அந்த வெற்றி மூன்று மாபெரும் மலேசிய மனிதர்களை சார்ந்ததாகும். அவர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் வீ.தி. சம்பந்தன், துன் தான் செங் லோக் ஆகிய மூவர். அதாவது, ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர், ஓர் இந்தியர் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய வெற்றிதான் மலாயாவின் சுதந்திரம். அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு கனவுதான். அனைத்து மக்களுக்குமான ஓர் நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு
இந்த மண்ணின் மைந்தர்களாக மலாய்க்காரர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் இந்தியர்களும் சீனர்களும் துன் சம்பந்தன், துன் தான் செங் லோக் ஆகிய தலைவர்களின் முயற்சியால், இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். மலாய்க்காரர்களுக்கு வழங்கிய உரிமைகளை அவர்கள் மிகவும் மதித்தார்கள். அதற்கு பிரதிபலனாக, சீன இந்திய சமூகத்திற்கான குடியுரிமை, சம உரிமை, நமது சமயங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான உரிமைகள், நமது கலாச்சாரங்களை, நமது மொழிகளை, கலாச்சாரங்களை பின்பற்றுவதற்கும், நமது மொழிகளை பேசுவதற்கும் உரிமைகள் ஆகியவற்றை அவர்கள் பாதுகாத்துக் கொண்டார்கள்.
இத்தகைய ஓர் சமூக ஒப்பந்தம் அடிப்படையில் தான் இந்த நாடு உருவானது. அந்த அடிப்படையில், இந்த நாட்டில் நாம் அனைவரும் இங்குள்ள வாய்ப்புகளையும், இடங்களையும் பங்கிட்டுக் கொண்டு, ஒருவருக்கொருவர் சரிசமமாக வாழ்ந்து, நமது எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாடு உருவானதற்கான சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையாகும்.
தோழர்களே, அதுதான் பெரிக்காத்தான் என்ற கூட்டணியின் உணர்வாகும். அந்தக் கூட்டணிதான் மலாயா என்ற நாடும், பின்னர் மலேசியா என்ற நாடும் பிறப்பதற்கு காரணமாக அமைந்தது. அன்று தொடங்கிய அந்த உணர்ச்சியும், எழுச்சியும் இன்றும் மஇகா-வில் உயிர்ப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு தொடர்வதற்கு காரணம், நாம் எதையோ பதவிகளை பெறுவதற்காக அல்ல, வசதியாக வாழ்வதற்காக அல்ல. மாறாக நமது கொள்கைக்காக நமது உணர்வுகள் இன்றும் கட்சியில் உயிர்ப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
1973 ஆம் ஆண்டில், அலையன்ஸ் கூட்டணி தேசிய முன்னணி என்ற பெயரில் உருமாற்றம் கண்டது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அந்தக் கூட்டணி, மலேசியாவை தொடர்ந்து வழிநடத்தி, வளர்ச்சிப் பாதையிலும், நிலைத்தன்மையிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் கொண்டு சென்றது.
அதன் பின்னர், கால ஓட்டத்தில் அரசாங்கத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் இடையிலான பாலமாக மஇகா திகழ்ந்தது. அந்த உறவுப் பாலத்தின் மூலம் நமது தோட்டப்புறங்களில் இருந்த மக்களின் குழந்தைகளை பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு மாற்றிக் காட்டியது. அவர்களின் கடுமையான சிரமங்களை குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் காட்டியது.
2008, 2018-ஆம் ஆண்டுகளில் மாறிய நமது நாட்டின் அரசியல் களம்
2008 ஆம் ஆண்டில், மலேசியா நமது நாட்டின் முதல் மிகப்பெரிய அரசியல் சுனாமியை சந்தித்தது. நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்தது. நம்மை இதுவரை தாங்கி இருந்த நிலம் இப்போது முற்றிலும் மாறியது. அந்த அரசியல் மாற்றங்களின் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்னவென்றால், மக்கள் இப்போது முன்னை விட அதிகமாக தங்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் உரத்த குரலில் – தெளிவாகவும், தீவிரத்துடனும் குரல் கொடுக்கிறார்கள் என்பதுதானஅதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு வந்தது.
நாம் அனைவரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி கூட்டணி, இந்த நாட்டை கட்டமைத்து உருவாக்கிய கூட்டணி, நாட்டை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நவீனமயமாக்க பாடுபட்ட கூட்டணி, ஆட்சியை இழந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக, நாம் எதிர்க்கட்சிகளின் வரிசையில் நாடாளுமன்றத்தில் அமர்ந்தோம்.அந்த தோல்வியின் தருணத்தில், பலர் தேசிய முன்னணி மீதான நம்பிக்கையை இழந்தார்கள். பலர் அந்தக் கூட்டணியிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டார்கள். இடைவெளி விட்டு தள்ளி நின்றார்கள். ஒரு காலத்தில் நமது இனங்களை ஒற்றுமைப்படுத்தவும், இந்த நாட்டை வழிநடத்தவும் செய்த கூட்டணி என்றாலும், அவர்கள் அவ்வாறு நினைக்காமல் அந்தக் கூட்டணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆனால் மஇகா, தேசிய முன்னணியை விட்டு ஓடவில்லை. ஒதுங்கவும் இல்லை, ஒளியவும் இல்லை. நாங்கள் ஏதோ தேசிய முன்னணியில் இல்லாத கட்சி என்பது போன்று நாங்கள் நடிக்கவும் இல்லை. நாங்கள் உறுதியுடன் தேசிய முன்னணியோடு ஒன்றிணைந்து நின்றோம். காரணம், விசுவாசம் என்பது வெற்றியின் போது நிரூபிக்கப்படுவதல்ல, மாறாக தோல்வியின் போது நிரூபிக்கப்படுவதாகும்.
மற்றவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விரல் நீட்டிய போது, நாமோ நட்புக் கரம் நீட்டினோம். மற்றவர்கள் தேசிய முன்னணியிலிருந்து விலகி ஓடுவதற்கு எந்த வாசல்கள் திறந்திருக்கின்றன எனத் தேடியபோது, நாம் நமது தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினோம்.
நாம் மீண்டும் நமது கிளைகளுக்குச் சென்றோம், தொகுதிகளுக்குச் சென்றோம், அடிமட்ட உறுப்பினர்களை அணுகினோம். நமது மக்களிடம் நாம் கூறினோம்: “நாம் இப்போது அரசாங்கத்தில் இல்லை, அரசாங்க ஆட்சியை இழந்து விட்டோம், ஆனால் நமது கௌரவத்தை, மரியாதையை இழக்கவில்லை” என்று மக்களிடம் நாம் முறையிட்டோம். முழங்கினோம்.
ஆனால், ஒன்றை நாம் அனைவரும் உண்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். 2008 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நமது அரசியல் பயணம், பூக்களால் ஆன சொகுசு பாதை அல்ல. மாறாக, அந்தப் பயணத்தில் குழப்பங்கள், நெருக்கடிகள், முரண்பாடுகள் நிறையவே இருந்தன. அரசாங்கங்கள் மாறின, கூட்டணிகள் உடைந்தன, அரசியல் நட்புகள் முறிந்தன. தேசிய முன்னணி என்ற சித்தாந்தமே பலமுறை சோதித்துப் பார்க்கப்பட்டது, மறு வடிவம் கண்டது, மீண்டும் மீண்டும் அதன் தோற்றமும், வடிவமும் கேள்விக்குறியாக்கப்பட்டது. அந்த நிலைத்தன்மையற்ற, உறுதியற்ற ஆண்டுகளில், பலர் உரத்த குரல் கொடுத்தனர். ஒரு சிலரே உறுதியுடன் நம்முடன் நிலைத்து நின்றனர். இந்த சிரமமான பயணத்தில், மஇகா அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு கொள்கை அடிப்படையில் விசுவாசமாக இருந்தது.
நமது மனவலிமையையும், தாக்குப் பிடிக்கும் சக்தியையும் சோதித்த அந்த நான்கு ஆண்டுகள், நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்தன. நாம் உண்மையிலேயே யார் – யாரை நாம் நம்பலாம், என்பது போன்ற பாடங்களை நாம் கற்றுக் கொண்டோம். திசைக்கு ஏற்ப வீசும் காற்றுக்கு ஏற்ப அரசியல் காட்சிகள் மாறலாம் என்பதை அந்த ஆண்டுகள் நமக்கு உணர்த்திக் காட்டின. ஆனால் நமது நம்பிக்கை ஓர் ஆழமான, ஒரு வலிமையான மரத்தைப் போல, ஆழமாக வேரூன்றி உறுதியுடன் நின்றது. அரசியல் புயல் வீசிய, அந்தக் காலகட்டத்தில் நாம் தாக்குப்பிடித்து, தொடர்ந்து அரசியலில் நிலைத்திருப்பதற்கு கற்றுக் கொண்டோம்.
அதன் மூலம், நாம் அடுத்த கட்ட மாபெரும் சோதனையை சந்திக்க முனைந்தோம். அதுதான் 15வது பொதுத் தேர்தல்.
நமது நம்பிக்கைகளைப் பரிசோதித்த 15-வது பொதுத் தேர்தல்
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பயணத்தை நாம் நேர்மையுடனும், உண்மையுடனும் விவாதிப்போம். அந்த ஆண்டில், நமது வலிமை மட்டும் சோதிக்கப்படவில்லை, மாறாக நமது நம்பிக்கைகளும் சோதிக்கப்பட்டன.பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டில் தான் நடத்தப்பட வேண்டும் என்றாலும், பல ஆண்டுகளாக நிலவிய நிலையற்ற தன்மை, கொந்தளிப்பு ஆகியவற்றிற்கு நடுவில், நாம் நமது அடித்தளத்தை மீண்டும் கட்டமைக்கவும், மக்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அவர்களின் நம்பிக்கைகளை மீண்டும் பெறவும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
ஆனால், நமக்கு கிடைத்த அந்த கால அவகாசம், திடீரென நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. அம்னோ, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த முன்வந்தது. அத்தகைய பொதுத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா என்பதற்கான ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தப்படாமல், அதிகார உத்தரவோடு அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒற்றுமையோடு நாம் அந்தத் தேர்தலை அணுகவில்லை, மாறாக ஓர் அவசரத்தோடும், ஒரு பெருமிதத்தோடும் நாம் அந்தத் தேர்தலை நடத்தினோம்.
அந்தத் தேர்தலுக்காக நாம் தயாராக இருக்கவில்லை.
நம்மை மீண்டும் கட்டமைத்து, மறுசீரமைக்க இன்னும் ஓராண்டு இருந்தது. பொதுத் தேர்தலுக்குத் தயாராக, மக்களுடன்தான் மஇகா என்றும் ஒன்றுபட்டு பயணிக்கிறது என்பதை மக்களுக்கு நினைவூட்ட, நமக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் இருந்தது.
இருப்பினும், தேசிய முன்னணி கூட்டணியின் ஓர் அங்கம் என்ற முறையில், பொதுத் தேர்தலை நடத்தும் அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டோம். அந்த முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக நின்றோம்.
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றோம்.
நமக்கு கீழே இருந்த அடித்தளம் உறுதியாக, உறுதியானது அல்ல என்பதை நாம் உணர்ந்திருந்தாலும், வாக்காளர்களின் மனங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பது தெரிந்திருந்தாலும், நாம் பொதுத் தேர்தலை சந்தித்தோம்.
அதற்கு காரணம், நாம் நமது கூட்டணி கட்சிகளுடன் கொண்டிருந்த நம்பிக்கையும், இந்த தேசிய முன்னணி கூட்டணி மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையும் ஆகும்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் அந்த நம்பிக்கை.
அந்தக் காலகட்டத்தில், நமது கூட்டணி மிகப்பெரிய நெருக்கடியை எதிர்நோக்கி இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அம்னோவின் தலைவர்கள் நீதிமன்றங்களில் ஊழல் குற்றங்களுக்காக நிறுத்தப்பட்டார்கள். தேசிய முன்னணியின் கௌரவமும் மதிப்பும் நொறுங்கியது. பலர் தேசிய முன்னணியிலிருந்து விலகிச் சென்றார்கள். பலர் தேசிய முன்னணியை கை கழுவி விட்டார்கள். ஆனால், நாம் மஇகா அவ்வாறு செய்யவில்லை. நாம் விசுவாசத்துடன், உறுதியோடு தேசிய முன்னணியுடன் இருந்தோம்.
அதற்கு காரணம் உண்டு. நாம் நமது கூட்டணியை, நமது தேசிய கூட்டணி மக்களிடையே செல்வாக்கு இல்லாத, மக்களின் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருந்த தருணத்திலும், நாம் நமது கூட்டணியை தற்காத்தோம்.
சட்டத்தின், நாட்டின் சட்டங்களுக்கு நாங்கள் மதிப்பளித்தோம். அந்த சட்டங்களின் மீது நம்பிக்கை கொண்டோம். காரணம், ஒவ்வொரு மனிதனுக்கும் நீதிமன்றத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள தகுதி உண்டு என நாங்களும் நம்பினோம்.
2018 ஆம் ஆண்டில், தேசிய முன்னணியிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து மசீச விவாதித்தது. ஆனால் அந்த சமயத்தில் கூட, நாம் உறுதியுடன் தேசிய முன்னணியுடன் இணைந்து நின்றோம். தேசிய முன்னணியிலிருந்து விலகக் கூடாது என்று மசீசவை நாம் வலியுறுத்தினோம்.
நமது கூட்டணி என்பது பரிசோதித்துப் பார்க்கப்படுவது வெற்றியின் தருணத்தில் அல்ல, மாறாக நெருக்கடியான காலகட்டங்களில் தான் என்பதை அவர்களுக்கு நாம் எடுத்துக் கூறினோம். நமது மூதாதையர்கள் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய ஓர் அமைப்பை, நாம் கைவிட்டு விடக்கூடாது என வலியுறுத்தினோம்.
விசுவாசம் என்பது நல்ல பருவ காலச் சூழ்நிலையில் மிகவும் சுலபமானது. ஆனால், ஓர் புயல் அடிக்கும் போதுதான் அந்த விசுவாசத்தின் உண்மையான அர்த்தம் அனைவருக்கும் புரியும்.
பொது மக்களிடையே எழுந்த மோசமான விமர்சனங்களை நாம் சமாளித்தோம். ஊடகங்களில் நம்மை தரக்குறைவாக விமர்சித்து வெளிவந்த தலைப்புச் செய்திகளை நாம் கடந்தோம். நமக்கு மிகவும் எதிராக நடந்துகொண்ட கூட்டத்தினரை சமாளித்தோம். இருந்தாலும் நமது கூட்டணி கட்சிகளின் பங்காளிகளை நாம் கைவிட்டு விடவில்லை.
மிக மோசமான அரசியல் புயல் வீசியபோதும் நாம் உறுதியுடன் நமது கூட்டணி தோழர்களுடன் நின்றோம். அவர்களின் பிரச்சினைகளை, அவர்களின் சுமைகளை, எங்களின் சுமைகளாக கருதி தாங்கிப் பிடித்தோம். மௌனத்துடன் இருந்து அதற்கான விலையையும் நாம் தந்தோம்.
இவையெல்லாம் கடந்து நாட்டை சூழ்ந்திருந்த கருமேகங்கள் மறைந்தவுடன், நாம் ஓர் உண்மையை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அது குறித்து எந்த தோழமைக் கட்சியும் பேச விரும்பாது. நமது விசுவாசம் மதிக்கப்படவில்லை. மாறாக, இழப்புக்கே இட்டுச் சென்றது.
2022-ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில், நாம் தோல்வி கண்டது வாக்குப் பெட்டிகளில் அல்ல தோழர்களே.
மாறாக, ஒற்றுமைக் கூட்டணி என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, ஆணவம், நமது கூட்டணிக் கட்சியின் சந்திப்பு அறைகளில் அரங்கேறியதன் காரணமாகத்தான் நாம் அந்தத் தேர்தலில் தோல்வி கண்டோம்.
அந்த மோசமான நினைவுகளை நமது சிந்தனையில் இருந்து மறந்து விடுவோம். ஆத்திரத்தால் அல்ல, மேலும் மன உறுதியுடன், மேலும் வலிமையுடன் உயிர்த்தெழுவோம் என்ற உறுதிப்பாட்டுடன், அந்த நினைவுகளை நாம் அழித்து விடுவோம்.
இதற்குப் பின்னரும் மஇகா, அது போன்ற மாபெரும் தவறுகள் நடப்பதற்கு இணங்கிப் போகாது. நமது ஆலோசனைகள் இன்றி முடிவுகள் எடுக்கப்பட நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். நமக்கு பொருத்தமில்லாத, நமக்கு சம்பந்தமில்லாத போர்களில் நம்மை இழுத்துவிடும் முயற்சிகளுக்கு நாம் துணை நிற்க மாட்டோம்.
கடந்த கால நடப்புகளை நாம் மீண்டும் திருத்திக் கொள்வோம். 15வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாடு எந்த திசையில் செல்வது, யார் அரசாங்கம் அமைப்பது என்ற குழப்பங்கள் நிலவியபோது, மாட்சிமை தங்கிய மாமன்னர், அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து, ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சி என்ற முறையில், மஇகாவும் மாமன்னரின் முடிவை மதித்து, ஒப்புக் கொண்டது.
மாமன்னர் விரும்பியது, தேசிய ஒற்றுமைக்கான ஓர் அரசாங்கம். அந்த அரசாங்கத்திற்கு தலைமையேற்க, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்றவராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திகழ்கிறார் என மாமன்னர் நம்பியதால், அவர் பிரதமர் ஆவதற்கு தனது ஒப்புதலை அளித்தார்.
இந்தக் கட்டத்தில், தேசிய முன்னணி நடுநிலைமையாக இருப்போம் என முதலில் அறிவித்தாலும், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. எனினும், மஇகா அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது. காரணம், நாம் கொண்டிருந்த விசுவாசமும், கட்டுப்பாடும்தான். அந்த முடிவுக்கு எதிராக நாம் புரட்சி செய்யவில்லை, எதிர்த்து களமாடவில்லை. மாறாக, மாமன்னரின் உத்தரவுக்கேற்ப, அந்த உத்தரவின் உணர்வுகளுக்கேற்ப, நாம் மதித்து நடந்து கொண்டோம்.
எனவே, இப்பொழுது, தேசிய முன்னணிக்கு எதிராக மஇகா நடந்து கொள்கிறது என்று யாராவது கூறினால், அவர்களுக்கு நாம் ஒரு உண்மையை எடுத்துக் கூற விரும்புகிறோம். மஇகா எந்தக் காலத்திலும் தேசிய முன்னணியின் நம்பிக்கையை குலைத்ததில்லை. காரணம், நமது மனசாட்சி எப்போதுமே தெளிவாக இருந்து வந்திருக்கிறது.
ஆனால், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை இல்லாமல் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றுமே நிலைத்து நிற்க முடியாது.
அச்சத்தால் இணைக்கப்பட்ட கூட்டணியும் நட்பும், எப்போதுமே நம்மை உற்சாகப்படுத்தவோ, ஊக்குவிக்கவோ முடியாது.
தனது உண்மையான நண்பர்களை மறந்துவிட்ட ஒரு இயக்கம், எப்போதும் உயிர்ப்புடன் தொடர்ந்து இயங்க முடியாது.
இந்த நாடு சுதந்திர நாடாக உருவானபோது, மஇகா அப்போதும் உடன் இருந்தது. நமது கூட்டணி உறுப்பினர்கள் தடுமாறி நின்றபோது, நாம் அவர்களுடன் இணைந்து கை கொடுத்து நின்றோம். ஆனால், இன்றோ, எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கும் போது, ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது.
நாம் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு உருவாக்கிய இந்த வீட்டில், நாம் வெறும் விருந்தினர்கள் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்த கூட்டணி இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் நாம். இந்தக் கூட்டணியை வெறுமனே பின்பற்றி நடந்தவர்கள் அல்ல. இந்தக் கூட்டணியின் தூண்களே நாங்கள்தான். இந்தக் கூட்டணியில் பயணம் செய்ய மட்டும் வந்தவர்கள் அல்ல. இதன் அடித்தளக் கட்டமைப்பு ஆட்டம் கண்டால், நாம் வீழ்ந்து விட மாட்டோம். மாறாக, அதனை மீண்டும் கட்டி அமைக்க முயற்சிப்போம். காரணம், நாம்தான் மஇகா.
நாம் வெறும் சலுகைகளாலும், வாய்ப்புகளாலும் மட்டும் எப்போதும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நம்பிக்கைகள் மூலமாகத்தான் நாம் உயர்வை காண முடியும். அதிகாரத்தினால் மட்டுமல்ல, கொள்கைகளால்தான் நாம் உயர்ந்து கொண்டே செல்ல முடியும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் அம்னோ – மஇகாவின் எதிரே இருக்கும் நிதர்சனமான உண்மைகள்.
ஒரு நாடாக இருந்தாலும் சரி, ஒரு கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களின் பயணத்தில், ஏதாவது ஒரு காலகட்டத்தில், நம் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற கேள்விகளை சுமந்து கொண்டு நிற்போம்.
நாம் கடந்து வந்த பாதை, இனிய நினைவுகளைக் கொண்டிருக்கும். இருந்தாலும், நாம் போக வேண்டிய பயணத்தின் பாதை, பல்வேறு கேள்விக் குறிகளோடு நிறைந்திருக்கும்.
2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நாம் அத்தகைய ஒரு காலகட்டத்தை அடைந்தோம். அந்த காலகட்டத்தின் போராட்டங்கள் நிறைவு கண்ட பின்னர், நமக்கு நாமே ஓர் கேள்வியை கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டது. நாம் இதுவரை காட்டிய விசுவாசத்திற்காக நமக்குக் கிடைத்த பலன்கள் என்ன? நமக்குக் கிடைத்த மரியாதைகள், நம்பிக்கைகள் என்ன? நமக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டனவா? நமக்கு நன்றிக் கடன் செலுத்தப்பட்டதா? அல்லது நாம் புறக்கணிக்கப்பட்டோமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.
எனவே, நாம் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால், சிந்திப்பதற்கு முன்னால், நம்மை நாமே ஒன்றை கேட்டுக் கொள்ள வேண்டும். இதுவரை நம்மை பின்னிப் பிணைத்திருந்த அதே கயிறுகளால் நாம் தொடர்ந்து கட்டிப் போடப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது நமக்கு நாமே ஒரு புதிய கயிறை நாம் உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அம்னோவுடன் நீண்ட காலமாக அரசியல் முரண்பாடு கொண்டிருந்த பி.கே.ஆர், ஜசெக கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தெளிவான, பகிரங்கமான தேர்வை அம்னோ எடுத்தது. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள அம்னோ அந்த முடிவை எடுத்தது.
நாம் நேர்மையுடன் கூற வேண்டும் என்றால், உண்மையுடன் கூற வேண்டும் என்றால், இந்த முடிவு தேசிய முன்னணியின் முடிவு அல்ல. மாறாக, அம்னோ மட்டுமே தனித்து மேற்கொண்ட ஒரு முடிவுதான் இது. இந்த முடிவில் மஇகாவோ, மசீசவோ கலந்தாலோசிக்கப்படவில்லை.
அதற்காக நாம் அம்னோ மீது ஆத்திரப்படவில்லை. அவர்களின் அரசியல் பிரச்சினைகளை, அரசியல் நிலவரங்களை நாம் புரிந்து கொள்கிறோம்.
இன்றைய நிலையில், அம்னோ 60 முதல் 70 விழுக்காடு வரையிலான மலாய் வாக்குகளை இழந்துவிட்டது. இத்தகைய பலவீனமான நிலையில், அம்னோ ஜசெக மற்றும் பி.கே.ஆர் கட்சிகளுடன் இணைந்துதான், அவர்களின் ஒத்துழைப்போடுதான், தொடர்ந்து அரசியல் பயணத்தை உயிர்ப்புடன் மேற்கொள்ள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அந்த உணர்வோடு பார்க்கும்போது, அவர்கள் மேற்கொண்ட முடிவு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்துக் கொண்ட ஒரு முடிவுதானே தவிர, நமக்கு துரோகம் இழைப்பதற்காக எடுத்த முடிவு அல்ல என்பதையும் நாங்கள் உணர்கிறோம்.
ஆனால், அதே வேளையில், சரிசமமாக அம்னோவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டணி உறுப்புக் கட்சிகள் அனைத்துமே முக்கியத்துவத்துடன் செயல்பட்டால் தான், இந்தக் கூட்டணி உயிர் வாழ முடியும். ஒவ்வொரு கூட்டணி உறுப்பினரும் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னால், அவர்களின் ஆலோசனைகள், அவர்களின் நிலைப்பாடுகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். முடிவுகள் எடுத்த பின், இவற்றையெல்லாம் கேட்கக் கூடாது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு இணைந்து கொள்ளும் அம்னோவின் முடிவு, அம்னோவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். மாறாக, நமது கூட்டணியின் எதிர்கால நலன்களுக்காகவோ, அல்லது அதன் பங்காளித்துவ கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டோ அந்த முடிவு எடுக்கப்பட்டதல்ல.
தங்களது கூட்டணியிலேயே யாரும் விரும்பாத ஒரு நகர்வை எடுப்பதற்கு, எந்த ஒரு புத்திசாலித்தனமான தலைவரும் விரும்பி எடுக்க மாட்டார். தனது பங்காளித்துவ கட்சிகளைப் பாதிப்புகளுக்கு உட்படுத்தும் முடிவுகளை எடுக்க எந்தத் தலைமைத்துவமும் விரும்பாது. அந்தத் தலைமைத்துவத்தின் சொந்த நெருக்கடி காரணமாக, அவசரத் தன்மையுடன்தான் அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும்.
இப்போதுள்ள தேசிய தலைமைத்துவம் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ளும் என்று நம்புகின்றோம். நமது பிரதமரும், ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவரும், ஒற்றுமை அரசாங்கமும் இன்றைய அம்னோ எடுக்கும் முடிவுகள் தேசிய முன்னணியின் ஒட்டுமொத்த கருத்துக்களை உள்ளடக்கிய முடிவுகள் அல்ல, மஇகாவின் கருத்துக்கள் அல்ல – என்பதை உணர்வார்கள் என நம்புகின்றோம்.
இந்த அரசியல் சூழ்நிலையின் பிரதிபலன் இதுதான். இந்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக நமக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இதுதான். நமக்கென அமைச்சுப் பொறுப்புகள் இல்லை. அரசாங்க அமைப்புகளில், அரசாங்க நிறுவனங்களில் நமக்கு பிரதிநிதித்துவம் இல்லை. மற்ற எந்த அரசாங்கப் பொறுப்புகளிலும் நமக்கென நியமனங்கள் இல்லை.
இதற்கெல்லாம் நமது மஇகாவின் நலன்களை பிரதிநிதிக்க, பாதுகாக்க, நமது தேசிய முன்னணித் தலைவர் தோல்வி கண்டது தான் காரணம்.
தேசிய முன்னணியின் தலைவர், அனைத்து தேசிய முன்னணி உறுப்பிய கட்சிகளின் தேவைகளை பிரதிபலிப்பதற்காக, அவற்றுக்கு குரல் கொடுப்பதற்காக அவர் மீது நம்பிக்கை வைத்தோம். ஆனால், அந்தக் கடமையை அவர் நிறைவேற்றவில்லை.
மஇகா அரசாங்கப் பொறுப்புகளில் சேர்க்கப்படவில்லை. காரணம், நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. ஆனால், நமக்காக பேச வேண்டியவர்கள், நமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள், அந்தக் கடமையை சரிவர, முறையாக செய்யவில்லை.
எனவே, நண்பர்களே, இந்த அரசியல் காரணங்களால், நாம் இப்போது இந்தக் மண்டபத்தில், இந்த தேசியப் பொதுப் பேரவையில், ஒரு முக்கியமான தருணத்தில் வந்து நிற்கின்றோம்.
இந்த தேசிய பொதுப் பேரவை நமது மனசாட்சியை பரிசோதிக்கும் களம்.
ஒவ்வொரு தேசிய பொதுப் பேரவையின் முன்னாலும், நான் உங்கள் முன் உரையாற்றும்போது, நாம் இதுவரை மாணவர்களுக்கு வழங்கிய உபகாரச் சம்பளங்கள் குறித்து பெருமிதத்தோடு கூறுவேன். நாம் உருவாக்கிய, கட்டிய பள்ளிகள், சமூக ரீதியாக நாம் இந்தியர்களை உயர்த்தி விட்ட விவரங்களைத் தெரிவிப்போம். ஆனால் இந்த ஆண்டு சற்று வித்தியாசமானது.
காரணம் இந்த முறை, நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்பதை கணக்கெடுத்து பார்ப்பதற்காக கூடவில்லை. ஆனால், இதுவரையில் நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை எதிர்கொண்டு கேள்வி கேட்க நாம் இங்கு கூடி இருக்கின்றோம்.
மஇகா-வையும் தேசிய முன்னணியையும் பிணைத்திருக்கும் நூலானது, நமது முன்னோர்களின் வியர்வையாலும் பல்லாண்டு கால விசுவாசத்தாலும் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், இப்போது நம்மைப் பிணைத்திருக்கும் அந்த நூல், அதன் உறுதித் தன்மையை இழந்துவிட்டது.
எனவே நம்மையும் தேசிய முன்னணியையும் பிணைத்திருக்கும் அந்த நூல் வலுவிழக்கும்போது, நாம் அமைதியாக அமர்ந்து கொண்டு, அந்த நூல் இன்னும் உறுதியாக இருக்கிறது, நம்மை கட்டிப் போட்டிருக்கிறது என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
இந்த மாநாடு என்பது, நாம் ஒரு புரட்சி செய்வதற்கான, எழுச்சி கொள்வதற்கான மாநாடு அல்ல. மாறாக, நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு, நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான ஒரு மாநாடாகும். கடந்து வந்த பாதையிலிருந்து நாம் விலகிச் செல்வதற்கான மாநாடு அல்ல இது.
நாம் இதுவரை கடந்து வந்த பாதை, இன்னும் நம்மை எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லுமா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.
ஒரு நீண்ட காலத்திற்கு, நாம் விசுவாசத்தை ஒரு சுமையாக சுமந்து கொண்டு வந்திருக்கின்றோம். சில கட்டங்களில் அந்த விசுவாசம் நமது பலவீனமாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக, பல காலமாக, நாம் ஒற்றுமையைக் கருதி ஒன்றுபட்டு நின்றோம். அந்த ஒற்றுமையைக்கூட மௌனத்தோடு நாம் பயன்படுத்திக் கொண்டோம்.
ஆனால், ஒரு காலகட்டம் வரும்போது, நமது பொறுமை கூட மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் அமைதியாக இருப்பது, நாம் தவறுகளுக்குத் துணை போவதாக பொருள் கொள்ளக்கூடாது.
எனவே தோழர்களே, நாம் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த மாநாடு என்பது, பொதுப் பேரவை என்பது, நமது பிணைப்புகளை உடைப்பதற்காக களம் அல்ல. மாறாக, நாம் துணிச்சலுடன் மீண்டும் எழுச்சி கொண்டு எழுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
இந்த தருணத்தில் நாம் நம்மை நோக்கி பணிவுடனும், நேர்மையுடனும், ஒரு கேள்வியை கேட்க வேண்டும். நமது கொள்கைகளுக்கு ஏற்ப நாம் இதுவரை நடந்து வந்திருக்கிறோமா? அல்லது வெறும் பதவிகளுக்காக நாம் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோமா? என்பதுதான் அந்த கேள்வி.
நாம் கடந்து வந்த அந்தப் பழைய உறவுப் பாலங்களை எரிப்பதற்காக இங்கு கூடவில்லை. மாறாக, நமது கௌரவத்தை நிலைநாட்டுவதற்கும், மீள் உருவாக்கம் செய்வதற்கும் நாம் இங்கே கூடியிருக்கிறோம். கடந்த கால வரலாற்றை தூக்கி எறிவதற்காக நாம் இங்கு கூடியிருக்கவில்லை. மாறாக, கடந்த கால வரலாற்றை மதித்து நடந்து கொள்வதற்காகவும், அதே சமயம் அந்த வரலாற்றின் சிறைகளுக்குள் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும்தான் இங்கே நாம் கூடியிருக்கிறோம்.
இந்த தேசிய பொதுப் பேரவை எப்போதுமே, மஇகா தேசிய முன்னணியை விட்டு விலகிய நாளாக வரலாற்றில் பேசப்படக்கூடாது. மாறாக, இந்த நாளில்தான் மஇகா எழுச்சி பெற்று நிமிர்ந்து நின்றது என்பதாக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும்.
நம்மை மீண்டும் ஒரு கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் – நமக்கு மரியாதை கொடுக்கும் அரசியல் பங்காளித்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் காலகட்டம்.
நமது நாடு தற்போது தீவிரமான அரசியல் மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இதுவாகும். ஏற்கனவே இருந்த அரசியல் கூட்டணிகள் மாறுகின்றன. கட்சிகள் உடைபடுகின்றன. உறுப்பிய கட்சிகளின் விசுவாசங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
இது போன்ற தருணங்களில் சிறிய சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் உறுப்பிய கட்சிகளை மறந்து விடவோ, அவர்களின் தியாகங்களை புறக்கணித்து விடவோ தலைமைத்துவங்கள் முனையக் கூடாது. அவர்கள் கடந்த காலங்களில் செய்த தியாகங்களை தலைமைத்துவங்கள் மறக்கக்கூடாது.
எனவே, மஇகா-வும் மற்றவர்களால் மறக்கப்படும் ஒரு கட்சியாக மாறிவிடக்கூடாது. கடந்த 60 ஆண்டுகளாக நாம் உறுதியுடன் நிலைத்து நின்றிருக்கின்றோம். பல்வேறு நெருக்கடிகள், தோல்விகள், வெற்றிகள், போராட்டங்கள் இவற்றிற்கிடையே நாம் விசுவாசமாகவும் இருந்திருக்கிறோம். அந்த விசுவாசத்தின் காரணமாக அரசியல் ரீதியாக நாம் பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றோம்.
மிகவும் சிரமமான தேர்தல்களில் நாம் நமது கூட்டணி கூட்டணியைத் தோளில் தூக்கி சுமந்திருக்கின்றோம். அதன் மதிப்பை எப்போதும் தற்காத்து வந்திருக்கின்றோம். நமது சமுதாயத்தின் ஆதரவை நாம் உண்மையுடன் வழங்கி வந்திருக்கின்றோம்.
எனினும், அடிக்கடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் போது, நமது குரல், நமது உணர்வுகள் கவனிக்கப்படுவதில்லை. நமது விசுவாசம் எப்போதும் உறுதியானது, மாறாதது என்றே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்திய சமூகத்தின் போராட்டங்களும், பிரச்சினைகளும் எப்போதும் முக்கியத்துவம் தரப்படாமல், கடைசி நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் அரசியல் மட்டுமல்ல. நமது மனங்களில் வலியை ஏற்படுத்தும் நிலைமையாகும்.
தங்களது வாழ்க்கையே கட்சிக்காக அர்ப்பணித்த தலைவர்கள் இந்த வலியை உணர்கிறார்கள்.
நமது அடிமட்ட உறுப்பினர்கள் நேரத்தையும், பணத்தையும், கௌரவத்தையும் இழந்து நமது கூட்டணியைத் தற்காக்க போராடி இருக்கின்றார்கள். அவர்களுக்கும் இந்த வலியை உணர்கிறார்கள்.
நம்பிக்கைகள் சிதைந்து கிடந்த காலகட்டத்தில் நம்மோடு இணைந்திருந்த நமது சமுதாயமும் இந்த வலியை இப்போது உணரத் தொடங்கி இருக்கிறது.
நாம் வாய்ப்புகளையோ, வசதிகளையோ கேட்கவில்லை. நாம் நமக்கான உபகாரங்களை கேட்கவில்லை. மாறாக, நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதைதான். எந்த ஒரு கூட்டணி அமைப்புக்கும் பரஸ்பர மரியாதைதான் முக்கிய அடித்தளமாகும்.
நமது நாடு மறுசீரமைப்பு, உருமாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் இந்த தருணத்தில், மஇகா துணிச்சலுடன் ஒன்றை கூற முன்வர வேண்டும். நமக்கு மரியாதை இல்லாத, நமக்கு நம்மை மதிக்காத ஒரு இடத்தில் நாம் இனியும் இருக்க மாட்டோம் என்ற முடிவுதான் அது.
நமது கடந்த கால பங்களிப்பை, நமது வரலாற்றை அங்கீகரிக்காத ஒரு கூட்டணி நமது சமுதாயத்தின் தேவைகளை அங்கீகரிக்காத ஒரு கூட்டணி – நமது கண்மூடித்தனமான விசுவாசத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. நமது கௌரவம் என்பது விலை போகக்கூடியதல்ல, பரிமாறப்படக்கூடியதல்ல. நமது மக்களின் உரிமைப் போராட்டங்கள் என்பது பேரம் பேசி மாற்றிக் கொள்வதல்ல. நமது மௌனம் என்பது நாம் ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம் என்பதாக இனியும் புரிந்து கொள்ளப்படக்கூடாது.
நமது மதிப்பை உணர்ந்து நம்மை அங்கீகரிக்கும் அமைப்புகளோடு நாம் இனி கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். நம்மை சரிசமமாக மதித்து நடக்கும், நம்முடன் உண்மையுடன் ஆலோசனை நடத்தும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும், இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலன்களை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அமைப்பை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேசியக் கொள்கைகளில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் என்பது ஒரு பக்கத்தின் இறுதியில் காணப்படும் சிறிய அடிக்குறிப்பாக இனியும் கருதப்படக்கூடாது.
நமது இருப்பை, நமது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்பவர்களோடு நாம் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு எண்ணிக்கை தேவைப்படும் போது மட்டும் நம்மை நினைவு கூர்ந்து கொள்ளும் கூட்டணிகளோடு நாம் இனியும் பயணிக்கக் கூடாது.
இது ஒரு மிரட்டலோ, எச்சரிக்கையோ அல்ல. இது கசப்புணர்வால் எடுக்கப்படும் முடிவும் அல்ல. இதை நாம் விரிவாக, விளக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதாலும், ஆனாலும் அதன் காரணமாக நாம் உடைந்து போகாமல் இருப்பதாலும் இந்த தெளிவான விளக்கத்தை நாம் தந்து கொண்டிருக்கின்றோம்.
மஇகா-வின் பொறுப்பு என்பது முதலில் நமது மக்களுக்கானதாகும்.
அரசியல் கூட்டணிகள் மாறும் இந்த காலகட்டத்தில், நாம் நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, பின்வருமாறு கூற வேண்டும்: “நமது மதிப்பும், கௌரவமும் எங்கு பாதுகாக்கப்படுகிறதோ, அங்குதான் நாங்கள் நிற்போம். எந்த இடத்தில் நமது சமுதாயத்தின் குரல் கவனித்துக் கேட்கப்படுகிறதோ, அங்குதான் இனி நாங்கள் இருப்போம். நமது தியாகங்கள் எங்கு மதிக்கப்படுகிறதோ, அங்குதான் நாங்கள் நிலைத்திருப்போம்”.
காரணம், தனது கௌரவத்தை மறந்துவிடும் ஒரு கட்சி தனது ஆன்மாவை இழந்து விடுகிறது. எனவே மஇகா தனது ஆன்மாவை எப்போதும் இழக்க விரும்பவில்லை.
மஇகா-வின் உருமாற்றத்தின் மையப்புள்ளி இளைஞர்கள்
நாம் நமது கூட்டணித் தொடர்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், நாம் நம்முடைய மரியாதையையும் மதிப்பையும் மீண்டும் பெற வேண்டும் என்றால், நாமும் உருமாறித்தான் ஆக வேண்டும். அத்தகைய உருமாற்றம் முதலில் நமது இளைஞர்களிடத்தில், இளைய சமுதாயத்திடமிருந்து தொடங்க வேண்டும்.
இத்தனை காலம் இல்லாத அளவுக்கு, இன்று நமது மஇகாவுக்கு, இளைய சமுதாயத்தின் கூர்மையான அறிவாற்றலும் வலிமையும், அவர்களின் உருவாக்கும் ஆற்றலும் தேவைப்படுகிறது.
இன்றைய இந்த இளைய சமுதாயம் வாழ்ந்து வரும் காலகட்டமானது, அரசியல் விவாதங்கள் டிக்டோக் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டமாகும். நமது செய்தித்தாள்கள் தங்களது தலைப்புச் செய்திகளை எழுதி முடிக்கும் முன்பே, அரசியல் விவாதங்கள் டிக்டோக் தளத்தில் நடைபெற்று முடிந்து விடுகின்றன.
நாம் ஓர் அறிக்கையைத் தயார் செய்வதற்கு முன்னால், யாரோ ஒருவர் அந்தப் பிரச்சனை குறித்து சுருக்கமாக விவரித்து, ஓர் பதிவை சமூக ஊடகங்களில் இட்டு விடுகிறார். அந்த விவகாரம் உணர்ச்சி சின்னங்கள், விளக்க உரைகள் ஆகியவற்றுடன் விறுவிறுப்பான பின்னணி இசையோடு வெளியிடப்படுகின்றன.
இது போன்ற ஆற்றலும் நமக்குத் தேவைப்படுகிறது. மலேசிய இளைஞர்கள், குறிப்பாக இந்திய இளைஞர்கள் திறமையானவர்கள், துணிச்சலுடன் பகிரங்கமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடியவர்கள், பிரச்சனைகள் பற்றி விவாதிக்க அஞ்சாதவர்கள். தன்னை மாற்றிக் கொள்ளாத, உருமாற்றிக் கொள்ளாத ஒரு கட்சியை அவர்கள் ஆதரிக்கப் போவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் உண்மையான நடவடிக்கை, செயல் ஆக்கம், அதைவிட முக்கியமாக வாட்ஸ்எப் புலனத்தில் வரும் செய்திகளுக்கான பதில்கள்.
அந்த வாட்ஸ்எப் செய்திகளுக்கு பதில் வழங்க நாம் ஒரு வாரம் எடுத்துக் கொண்டால், நாம் நமது பதவியிலிருந்து விலகி விட்டோம் என்று அவர்கள் கருதி விடுவார்கள். எனவேதான், நாம் அவர்களின் மொழியைப் பேச வேண்டும். அவர்களுக்காக நீண்ட உரைகளை புள்ளி விவரங்களோடு, வரலாற்று ஆவணங்களின் குறிப்புகளோடு நாம் நிகழ்த்த வேண்டியதில்லை. மாறாக, தெளிவான, உடனுக்குடன் பரிமாறக்கூடிய செய்திகளை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
அவர்கள் எப்போதும் ஒன்று கூடும் தளங்களான இன்ஸ்டாகிராம், டிக்டோக், யூடியூப், எக்ஸ் தளம், மற்றும் போட்காஸ்ட் (podcast) எனப்படும் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம்தான் அவர்களை நாம் சந்திக்க வேண்டும். நாம் அங்கே நமது இருப்பை காட்டிக் கொள்ளாவிட்டால், நமக்கு பதிலாக இன்னொருவர் நமது கதையை அங்கு சொல்லிவிட்டு போய்விடுவார்.
இந்த இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்தும், ஆர்வப்படுத்தும் ஒரு கட்சியாக மஇகா-வை நாம் கட்டமைக்க வேண்டும். அந்த இளைய சமுதாயத்தை நாம் வலிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெறும் பதவிகளை மட்டும் வழங்காமல், உண்மையிலேயே ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்புகளை, ஆற்றலை உருவாக்கிக் தர வேண்டும்.
இப்போது நாம் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் நுழைந்திருக்கின்றோம்.
இப்போதுள்ள உண்மையான நிலவரம் என்னவென்றால், 22 வயது கொண்ட ஒருவன், ஒரு மடிக்கணிணியுடன், நல்ல இணையத்தொடர்பு வசதிகளுடன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ தளங்களின் மூலம், ஒரே மாலை வேளையில் வாக்காளர்களை அணுகிவிட முடியும். முன்புபோல் ஒரு மிகப்பெரிய செயல் நடவடிக்கை அறை இனியும் தேவையில்லை. அத்தகைய செயல் நடவடிக்கை அறையின் மூலம், நாம் ஒரு வார காலத்தில் சாதித்ததை, அவர்கள் ஒரு நாளில் சாதித்து விடுவார்கள்.
எனவே, இந்த உண்மை நிலவரத்தை நாம் குறைத்து மதிப்பிடாமல், எதிர்த்து நிற்காமல், அந்த மாற்றத்தை நாம் தழுவிக் கொள்ள வேண்டும்.
நமது இளைஞர்களுக்கு இன்றைய தேவை, அவர்களின் கோரிக்கைகளை செவிமெடுக்கும் ஒரு கட்சி, அவர்களின் கருத்துக்களை மதிக்கும், அவர்கள் தலைமையேற்று வழிநடத்த வாய்ப்புகள் தரும் ஒரு கட்சி. மஇகா அது போன்ற ஒரு கட்சியாக, தளமாக மாற வேண்டும். மாறாக, உருமாற்றங்களும், புத்தாக்கங்களும் நடைபெறுவதைக் கண்டு அச்சப்படும் இடமாக மஇகா மாறக்கூடாது. புதிய புத்தாக்க உருவாக்கங்கள் கொண்டாடப்பட வேண்டும்.
பழைய நினைவுகளில் நாம் புதைந்து போய்விடக்கூடாது. 2.0 என்று கூறப்படும் புதிய உருமாற்றத்திற்கு நாம் மேலும் கூர்மையுடனும், மேலும் நவீன தொழில்நுட்ப உதவியுடனும் தயாராக வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒன்று மட்டும் நிச்சயம். அது என்னவென்றால், இன்றைய நமது இளைஞர்கள்தான் எதிர்காலத்தை வழிநடத்துவார்கள் என்பதுதான் அது. எனவே மஇகா அவர்களுடன் எப்போதுமே துணை நிற்க வேண்டும். மஇகா எப்போதும் அவர்களுடன் இணைந்து, ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். அவர்களுக்குப் பின்னால் நிற்கக்கூடாது.
மகளிர் தலைமைத்துவம் – ஒவ்வொரு இந்திய மகளிரையும் கட்சி எல்லைக்கோடுகளுக்கு அப்பால் வலிமைப்படுத்துவது.
நமது இளைஞர்கள் அரசியல் பங்கெடுப்பை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் கூறும் அதே வேளையில், நமது சமுதாயத்தின் மிகப்பெரிய தூணான, மகளிர் பிரிவையும் நாம் மதிக்க வேண்டும், அவர்களையும் வலிமைப்படுத்த வேண்டும்.
நமது சமுதாயத்தின் மிகப்பெரிய வலிமையாக, ஆனால் மௌனமான வலிமையாக, இந்திய மகளிர் இருந்து வந்திருக்கின்றார்கள். நமது குடும்பங்களை ஒருங்கிணைத்து வைத்திருப்பது அவர்கள்தான். எத்தனையோ சிரமங்களுக்கு இடையில், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும், நமது கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் பாதுகாத்து, நாம் எப்போதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்ற, உணர்ச்சிகரமான சுமைகளை தங்களுடன் சுமந்து கொண்டு வருபவர்கள் நமது இந்திய சமுதாய பெண்மணிகள்.
அந்த வகையில், மஇகா-வின் மகளிர் பிரிவு எப்போதுமே நமது கட்சியின் தூண்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இப்போது, நமது அவர்களுக்கான நமது பொறுப்பு, வெறும் உறுப்பிய பட்டியலைத் தாண்டி நீட்டிக்கப்பட வேண்டும்.
நமது கட்சியின் சின்னங்களை அணிகிறார்களோ, அல்லது இன்னொரு கட்சியை ஆதரிக்கிறார்களோ, அல்லது எந்த கட்சியும் ஆதரிக்காமல் இருக்கிறார்களோ என்றெல்லாம் பார்க்காமல், எல்லா இந்திய பெண்மணிகளுக்கும் நாம் ஆதரவாக துணை நிற்க வேண்டும்.
தங்களது குழந்தைகளின் குடியுரிமைப் பிரச்சினைகளுக்காகப் போராடும் தாய்மார்களுக்காக நமது இயக்கம் அவர்களை அணுக வேண்டும். தங்களது பிள்ளைகளின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் போராடும் இளம் தாய்மார்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். கணவனை இழந்த, தனித்து விடப்படும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் அரசாங்கத் தடைகளை அவர்கள் சிரமப்படாமல் கடப்பதற்கு நாம் உதவ வேண்டும். சிறுதொழில் செய்வதற்காக முதலீடுகளைத் தேடி அலையும், வணிக நோக்குடைய பெண்களுக்கு நாம் கை கொடுக்க வேண்டும். அரசாங்க நடைமுறைகளால் தாங்கள் மறக்கப்பட்டு விட்டதாக நினைக்கும் மூத்த பெண்மணிகளுக்கு நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு நாம் அவர்களை வலிமைப்படுத்துவது, கட்சி பிரிவுகளால் ஆனதாக இருக்கக்கூடாது. இந்திய மகளிரை நாம் முன்னேற்றும் நமது கடமையானது, அவர்களின் போராட்டங்கள் அரசியல் ஆதரவு நிலைப்பாட்டினால் தொடங்குவதோ முடிவதோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அவர்களின் சவால்கள் மனிதாபிமானம் மிக்கவை, சமூக அடிப்படையிலானவை, பொருளாதார அடிப்படையிலானவை. எனவே அவர்களுக்குத் தகுதியான ஒரு குரல் அவர்களுக்காக எப்போதும் போராட முன்வர வேண்டும்.
இதைச் செய்வதற்கு, மஇகா மகளிர் பகுதி ஒரு தேசிய இயக்கமாக, வலிமையானதாகப் போராட வேண்டும். அதே சமயம், அவர்கள் அன்புடன் கவனிக்கப்பட வேண்டும். அதற்காக, கீழ்க்காணும் வாய்ப்புகளை உருவாக்கும் தளங்களை நாம் உருவாக்க வேண்டும்:
(i) சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சவால்களை எதிர்நோக்கும் பெண்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
(ii) இளம் பெண்கள் நம்பிக்கையோடு தங்களின் எதிர்கால கனவுகளை நோக்கி பயணிக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை நாம் வழங்க வேண்டும். வழிகாட்டி திட்டங்களை நாம் வழங்க வேண்டும்.
(iii) பெண்களை பொருளாதார ரீதியாக வலிமைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டடு, மகளிர் வணிகங்களையும், நிதிகளை நிர்வாகம் செய்ய உதவ வேண்டும்.
(iv) குடும்பங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்கி, உணர்ச்சிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
(v) இன்றைய நவீன மின்னிலக்க யுகத்தில், பெண்கள் மின்னிலக்கத் துறையில் ஆற்றல் பெறவும், வலிமை பெறவும், மின்னிலக்க கல்வியும், இணையப் பாதுகாப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.
இந்த நமது முன்னெடுப்புகள், நகரங்களிலும், தோட்டப்புறங்களிலும், புறநகர்களிலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் எல்லா பெண்களையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். அங்கெல்லாம் பெண்கள் மௌனமாக போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தியப் பெண்கள் எப்போதுமே தங்களுக்கென சிறப்பு சலுகைகளை எதிர்பார்த்ததில்லை. மாறாக, நியாயமான, சரிசமமான வாய்ப்புகளையும், மரியாதைகளையும்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
ஒரு பெண் உயரும்போது, அந்தப் பெண் மட்டும் பயனடைவதில்லை. மாறாக, அவர்கள் சார்ந்த குடும்பங்களும் நிலைத்தன்மை அடைகின்றன. அவர்களின் குழந்தைகளும் எதிர்கால நம்பிக்கைகளைப் பெறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக சமுதாயமே ஒரு வலிமையான அடித்தளத்தை, எதையும் தாங்கக்கூடிய அடித்தளத்தை கட்டமைத்து பலனடைகிறது.
ஒவ்வொரு இந்தியப் பெண்மணியின் பின்னாலும் மஇகா உறுதியுடன் ஆதரவாக அவர்களுக்காக நிற்க வேண்டும். அவர்களுக்குத் தெளிவாக ஒரு செய்தியை சொல்ல வேண்டும். நீங்கள் தனியாக இருக்கவில்லை. உங்களது போராட்டங்கள் எங்களுக்குப் புரிகிறது. உங்களின் குரல்களை நாங்கள் கேட்கின்றோம், கவனிக்கின்றோம். இந்தக் கட்சி உங்களுக்காக என்றும் போராடும் என்ற செய்திதான் அது.
இதனால்தான் நீதிக்காக நடத்தப்படும் போராட்டத்தில், நடைப்பயணத்தில் நாமும் பங்கெடுக்கவிருக்கின்றோம்.
தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்காக திருமதி இந்திரா காந்தி, சோகோ வணிக வளாகத்திலிருந்து புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு தனது போராட்டத்தின் அடையாளமாக நடைப்பயணம் செல்லும்போது, மஇகாவும், குறிப்பாக மஇகா மகளிர் பிரிவும் அவருடன் இணைந்து நடைபோடும்.
இது வெறும் நடைப்பயணம் அல்ல. மாறாக, நமது பெண்களின் பாதுகாப்பு, கௌரவம், உரிமைகள், அவர்களின் குழந்தைகள் மீதான உரிமைகள் ஆகியவற்றுக்கு நாம் எப்போதுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாம் விடுக்கும் அறைகூவல்தான் இந்த நடைப்பயணம்.
நமது மஇகா வெறும் வார்த்தைகளால் மட்டும் மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக, நமது செயல்களாலும் அதை நிரூபித்து வருகிறோம். இந்திரா காந்தியுடன் இணைந்து நிற்பதால், நீதி கிடைக்காத ஒவ்வொரு தாய்மார்களுக்கும், அவர்களின் மகள்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் துணையாக உறுதியுடன் நாங்கள் நிற்போம் என்பதை உறுதிப்படுத்தவே இந்திரா காந்திக்கான எங்களின் இந்த ஆதரவு.
இது வெறும் அரசியல் கடமை மட்டுமல்ல, மற்றபடி நமது சமூக கடப்பாடும், பொறுப்புணர்வும் ஆகும். பல்லாண்டுகளாக மாறி வந்திருக்கும் நமது சமுதாய மாற்றங்களின் அடித்தளமாக இருந்து வந்திருக்கும் நமது பெண்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நமது கடப்பாடுதான் இது.
இப்போதைய அரசியல் சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல்.
நாம் நமது இளைஞர், மகளிர் பிரிவுகளின் மூலமாக நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டு முன்னேறிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், நாம் எத்தகைய அரசியல் போர்க்களத்தில் போராளிகளாக நிற்கின்றோம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்ததும் நமக்கு ஒன்றை உணர்த்தியது. இத்தகைய கூட்டணி அரசியல் எவ்வளவு சுலபமாக உடையக்கூடியது என்பதையும், எவ்வளவு சீக்கிரத்தில், சுலபத்தில் நீண்டகால அரசியல் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நம்பிக்கைகள் சிதறிப் போகும் என்பதையும் நமக்கு இந்த அரசியல் மாற்றங்கள் உணர்த்தின.
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து, நமது நாட்டின் அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் மிகவும் ஒற்றுமையாக இருந்த மலாய் அரசியல் கட்சிகள், இப்போது உடைபட்டு, பிளவு கண்டு, அம்னோ, பெர்சாத்து, பாஸ், புத்ரா, பெஜுவாங் என பல கட்சிகளாக பிரிந்து கிடக்கின்றன. இந்தப் பிளவுகளினால் கூட்டணிகள் நிலைத்தன்மையை இழந்துவிட்டன.
பாரம்பரியமாக அதிகாரக் கட்டமைப்பை கொண்டிருந்த கட்சிகளின் இந்த அண்மைக்கால அரசியல் நகர்வுகள் அவற்றை பலவீனப்படுத்தி விட்டன. கடந்த காலங்களில் நமது சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்து வந்த இந்தக் கட்டமைப்புகளும் இப்போது தகர்ந்து விட்டன.
தேசிய முன்னணியின் மூத்த உறுப்பினர் என்ற முறையிலும், வலிமையான கட்சி என்ற முறையிலும் பல ஆண்டுகளாக மஇகா அம்னோவைச் சார்ந்து அரசியல் நடத்தி வந்தது. 2008 ஆம் ஆண்டு வரையில், கடந்த கால தேசிய முன்னணி வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 2008 ஆம் ஆண்டு வரையில், மஇகா என்பது இந்திய வாக்குகளை அள்ளித் தரும் ஒரு அங்கமாக, அம்னோவை அதிகாரத்தில் வைத்திருக்கக்கூடிய கட்சியாக இருந்து வந்தது. மஇகா மூலமாக இந்திய சமுதாயம் தேசிய முன்னணியின் நிலையான ஆதரவு வாக்கு வங்கி என பாராட்டப்பட்டது.
ஆனால் 2008 ஆம் ஆண்டில் நடந்த அரசியல் மாற்றங்கள் நமது கட்சியின் கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. நம்மையும் மீறி பல சம்பவங்கள் நடந்தேறின. எனினும், மஇகா மீது சில தரப்புகள் காட்டிய முரண்பட்ட அணுகுமுறைகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நமது கூட்டணி எந்த அடிப்படையில் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக சில நகர்வுகள் நடந்தன. இந்த சூழ்நிலையில், தாங்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என மஇகா எதிர்பார்த்தது தவறான ஒன்றா?
2007 ஆம் ஆண்டில் ஹிண்ட்ராஃப் போராட்டங்களின் மூலம் நமக்குக் கிடைத்த, நாம் சந்தித்த எதிர்ப்புக் கணைகள், 2008 முதல் 2018 வரை நாம் சந்தித்த பத்தாண்டு கால தலைமைத்துவப் போராட்டங்கள், இவையெல்லாம் சேர்ந்து பல ஆண்டுகாலமாக இந்தியர்களின் 80 விழுக்காடு வாக்குகளை தேசிய முன்னணிக்கு வழங்கி வந்த மஇகாவின் ஆற்றல் சிதைந்தது. இதன் காரணமாகவே, தேசிய முன்னணி கூட்டணியின் ஒரு வலிமையான அங்கமாக இந்திய சமுதாயம் திகழ்ந்து வந்தது.
நமது கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் விடுத்த தாக்குதல்கள், தேசிய முன்னணியை பலவீனப்படுத்தும் முயற்சிகளாகும். மஇகா மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள், நாம் அம்னோவின் சொற்படி எல்லாம் நடனம் ஆடுகின்றோம், ஒரு மூத்த சகோதரன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு நடக்கிறோம் என்பதுதான். இதன் மூலம் நமது சமுதாயத்தின் சினத்தை நாம் எதிர்நோக்கினோம்.
ஆனால், அம்னோவின் அரசியல் ஆதிக்கம் அதன் உட்கட்சிப் பிரச்சனைகளால் சரியத் தொடங்கியது. அதன் காரணமாக, அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவையும் அந்தக் கட்சி இழந்தது. இதன் பிரதிபலனாக மஇகாவும் அவர்களால் பாதிக்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை உறுப்பியம் என்று வரும்போது, நாம்தான் தண்டிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டோம். தொகுதிகள் உடன்பாடு, பேச்சுவார்த்தைகளில் நாம் ஒதுக்கி புறந்தள்ளப்பட்டோம். நமது சமுதாயத்தின் விவகாரங்கள், பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
நமது சமுதாயத்தை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய நினைக்கும் அதிகார மையங்களின் முயற்சிகள் இவை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். இதே போன்ற தன்மைகளை கடந்த காலங்களிலும் நாம் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட மாட்டோம். இதனால் நாங்கள் பலவீனப்படுத்தப்படவோ, முடக்கப்படவோ மாட்டோம். துரோகங்களால் நிலைகுலைந்து விட மாட்டோம். ஏமாற்று வார்த்தைகளால் நிலைகுலைந்து விட மாட்டோம். நாங்கள் கோரிக்கை விடுப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சரிசமமான, வெளிப்படையான ஒரு கூட்டணி, அதன் உறுப்பியக் கட்சிகள் அனைத்தையும் சரிசமமாக மதிக்கும் ஒரு கூட்டணி. அவ்வளவுதான்.
மீண்டும் ஒரு கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் – நமக்கு மரியாதை கொடுக்கும் அரசியல் பங்காளித்துவத்தை தேர்ந்தெடுக்கும் காலகட்டம்.
நமது நாடு தீவிரமான அரசியல் மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இதுவாகும். ஏற்கனவே இருந்த அரசியல் கூட்டணிகள் மாறுகின்றன. கட்சிகள் உடைபடுகின்றன. உறுப்பிய கட்சிகளின் விசுவாசங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
இது போன்ற தருணங்களில் சிறிய சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது.
நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் உறுப்பியக் கட்சிகளை மறந்துவிடவோ, அவர்களின் தியாகங்களை புறக்கணித்து விடவோ தலைமைத்துவங்கள் முனையக் கூடாது. அவர்களுக்காக செய்த தியாகங்களை தலைமைத்துவங்கள் மறக்கக்கூடாது.
எனவே, மஇகா-வும் மற்றவர்களால் மறக்கப்படும் ஒரு கட்சியாக மாறிவிடக்கூடாது. கடந்த 60 ஆண்டுகளாக நாம் உறுதியுடன் நிலைத்து நின்றிருக்கின்றோம். பல்வேறு நெருக்கடிகள், தோல்விகள், வெற்றிகள், போராட்டங்கள் இவற்றிற்கிடையே நாம் விசுவாசமாகவும் இருந்திருக்கிறோம். அந்த விசுவாசத்தின் காரணமாக அரசியல் ரீதியாக நாம் பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றோம்.
மிகவும் சிரமமான தேர்தல்களில் நாம் நமது கூட்டணி கூட்டணியை தோளில் தூக்கி சுமந்திருக்கின்றோம். அதன் மதிப்பை, மதிப்பீடுகளை எப்போதுமே தற்காத்து வந்திருக்கின்றோம். நமது சமுதாயத்தின் ஆதரவை நாம் வழங்கி வந்திருக்கின்றோம், உண்மையுடன் வழங்கி வந்திருக்கின்றோம்.
எனினும், அடிக்கடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் போது, நமது குரல், நமது உணர்வுகள் கவனிக்கப்படுவதில்லை. நமது விசுவாசம் எப்போதுமே உறுதியானது, மாறாதது என்றே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்திய சமூகத்தின் போராட்டங்களும் பிரச்சினைகளும் எப்போதுமே முக்கியத்துவம் தரப்படாமல், கடைசி நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் அரசியல் மட்டுமல்ல. நமக்கு நமது மனங்களில் வலியை ஏற்படுத்தும் நிலைமையாகும்.
தங்களது வாழ்க்கையே கட்சிக்காக அர்ப்பணித்த தலைவர்களுக்கு இந்த வலியை உணர்கிறார்கள்.
நமது அடிமட்ட உறுப்பினர்கள் நேரத்தையும், பணத்தையும், கௌரவத்தையும் இழந்து நமது கூட்டணியை தற்காக்க போராடி இருக்கின்றார்கள். அவர்களும் இந்த வலி வலியை உணர்கிறார்கள்.
நம்பிக்கைகள் சிதைந்து கிடந்த காலகட்டத்தில் நம்மோடு இணைந்திருந்த நமது சமுதாயமும் இந்த வலியை இப்போது உணரத் தொடங்கி இருக்கிறது.
நாம் வாய்ப்புகளையோ வசதிகளையோ கேட்கவில்லை. நாம் நமக்கான உபகாரங்களை கேட்கவில்லை. மாறாக நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை தான். எந்த ஒரு கூட்டணி அமைப்புக்கும் பரஸ்பர மரியாதை தான் முக்கிய அடித்தளமாகும்.
நமது நாடு மறுசீரமைப்பு, உருமாற்றங்களை நோக்கி பயணிக்கும் இந்த தருணத்தில், மஇகா துணிச்சலுடன் ஒன்றை கூற முன்வர வேண்டும். நமக்கு மரியாதை இல்லாத, நமக்கு நம்மை மதிக்காத ஒரு இடத்தில் நாம் இனியும் இருக்க மாட்டோம் என்ற முடிவு தான் அது.
நமது பங்களிப்பை, கடந்த கால பங்களிப்பை, நமது வரலாற்றை அங்கீகரிக்காத ஓர் கூட்டணியில் நமது சமுதாயத்தின் தேவைகளை அங்கீகரிக்காத ஒரு கூட்டணி நமது கண்மூடித்தனமான விசுவாசத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. நமது கௌரவம் என்பது விலை போகக்கூடியதல்ல, பரிமாறப்படக்கூடியதல்ல. நமது மக்களின் உரிமைப் போராட்டங்கள் என்பது பேரம் பேசி மாற்றிக் கொள்வதல்ல. நமது மௌனம் என்பது நாம் ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம் என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது, இனியும் புரிந்து கொள்ளப்படக்கூடாது.
நமது மதிப்பை உணர்ந்து நம்மை அங்கீகரிக்கும் அமைப்புகளோடு நாம் இனி கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். நம்மை சரிசமமாக மதித்து நடக்கும், நம்முடன் உண்மையுடன் ஆலோசனை நடத்தும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும், இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலன்களை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அமைப்பை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேசியக் கொள்கைகளில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் என்பது ஒரு பக்கத்தின் கீழே சிறிய அடிக்குறிப்பாக இனியும் கருதப்படக்கூடாது.
நமது இருப்பை, நமது முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்பவர்களோடு நாம் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு எண்ணிக்கை தேவைப்படும் போது மட்டும் நம்மை நினைவு கூர்ந்து கொள்ளும் கூட்டணிகளோடு நாம் இனியும் பயணிக்கக் கூடாது.
இது ஒரு மிரட்டலோ, எச்சரிக்கையோ அல்ல. இது கசப்புணர்வால் எடுக்கப்படும் முடிவும் அல்ல. இதை நாம் விரிவாக, விளக்கமாக தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதாலும், அதன் காரணமாக நாம் உடைந்து போகாமல் இருப்பதாலும் இந்த தெளிவான விளக்கத்தை நாம் தருகின்றோம்.
மஇகா-வின் பொறுப்பு என்பது முதலில் நமது மக்களுக்கானதாகும். அரசியல் கூட்டணிகள் மாறும் இந்த காலகட்டத்தில், நாம் நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, பின்வருமாறு கூற வேண்டும். நமது மதிப்பும், கௌரவமும் எங்கு பாதுகாக்கப்படுகிறதோ, அங்குதான் நாங்கள் நிற்போம். எந்த இடத்தில் நமது சமுதாயத்தின் குரல் கவனித்துக் கேட்கப்படுகிறதோ, அங்குதான் நாங்கள் இருப்போம். நமது தியாகங்கள் எங்கு மதிக்கப்படுகிறதோ, அங்குதான் நாங்கள் நிலைத்திருப்போம்.
காரணம், தனது கௌரவத்தை மறந்துவிடும் ஒரு கட்சி தனது ஆன்மாவை இழந்து விடுகிறது. எனவே மஇகா தனது ஆன்மாவை எப்போதும் இழக்க விரும்பவில்லை.
பெரிக்காத்தான் கூட்டணி உணர்வுகள் இன்னும் உயிர்ப்புடன் தொடர்கின்றன.
எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னால், நாம், நாம் எங்கிருந்து தொடங்கினோம் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். 1954 ஆம் ஆண்டில் மூன்று மாமனிதர்கள், துங்கு அப்துல் ரஹ்மான், துன் தான் செங் லோக், துன் வீதி சம்பந்தன் ஆகியோர் ஒன்றிணைந்து, கரம் கோர்த்து, ஒரு புதிய மலாயா நாட்டை உருவாக்க முடிவெடுத்தனர். அந்தக் கூட்டணிக்கு அவர்கள் வைத்த பெயர் பெரிக்காத்தான். அதாவது ஆங்கிலத்தில் அலையன்ஸ்.
அந்தக் கூட்டணி நட்பினால் உருவான கூட்டணி, அச்சத்தினாலோ, மிரட்டலாலோ உருவான கூட்டணி அல்ல. அதிகாரத்தினால் உருவான கூட்டணியும் அல்ல, ஆனால் கொள்கையினால் உருவான கூட்டணி. ஒருவரை ஒருவர் ஆதிக்க செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல, பரஸ்பர மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவான கூட்டணி.
அந்தக் கூட்டணிதான் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது. அந்தக் கூட்டணிதான் நமக்கொரு அடையாளத்தை உருவாக்கித் தந்தது. அந்தக் கூட்டணிதான் நமக்கென மலேசியா என்ற ஒரு நாட்டை அடைக்கலமாக தேடிக் கொடுத்தது.
1973 ஆம் ஆண்டில் அந்த அலையன்ஸ் கூட்டணி தேசிய முன்னணியாக உருமாற்றம் கண்டு, 13 கட்சிகளுடன் தோற்றம் கண்டது. பல ஆண்டுகளுக்கு மலேசியாவை ஆட்சி செய்தது. மலேசியாவின் வளர்ச்சியிலும், நிலைத்தன்மையிலும், அமைதியிலும் முக்கியப் பங்காற்றியது.
இன்று தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இதன் மூலம் நாம் ஒரு முழுமையான வட்டச் சுற்றை அடைந்துவிட்டோம்.
முதன்முதலில் இந்தக் கூட்டணி எங்கிருந்து, எந்தப் புள்ளியிலிருந்து தொடங்கியதோ, அந்த இடத்திற்கு நாம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கின்றோம். இந்தக் கூட்டணி பயணத்தை நாம் மூன்று உறுப்பியக் கட்சிகளுடன் தொடங்கினோம். பல்லாண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னால், வெற்றிகள், தோல்விகள், அரசியல் புயல்கள், இவற்றுக்கு நடுவே, மற்ற பல கட்சிகள் நமது கூட்டணிக்குள் வந்தன, சில பிரிந்து சென்றன. எல்லாம் நிறைவடைந்த பின்னர், மீண்டும் நாம் மூன்று கட்சிகள் மட்டும் இந்தக் கூட்டணியில் எஞ்சி இருக்கின்றோம்.
எனவே, நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளாக அல்ல, மாறாக நமது இந்த பாரம்பரியத்தை நமது தோள்களில் இத்தனை ஆண்டுகள் சுமந்து வந்தவர்கள் என்ற முறையில் இந்தக் கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
மற்ற கூட்டணி உறுப்பியக் கட்சிகள் ஏன் நம்மிடமிருந்து பிரிந்து சென்றன? நாம் மட்டும் ஏன் இங்கே இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறோம்? பெரிக்காத்தான் என்ற அலையன்ஸ் கூட்டணியின் வேர்களிலிருந்து தொடங்கிய நாம், அதிலிருந்து முற்றிலும் மாற்றம் கண்ட, மாறிவிட்ட தேசிய முன்னணியை நாம் இனியும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்பதை நாம் நமது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.
இன்னொரு கேள்வியையும் நாம் கேட்க வேண்டும். நாம் நமது முந்தைய வேர்களை அது எப்படி இருந்ததோ, அதே உணர்வோடும், வடிவத்தோடும் சென்றடைந்திருக்கின்றோமா என்பதுதான் அது.
காரணம், நாம் பெரிக்காத்தான் என்ற கூட்டணியில் நாம் பயணத்தைத் தொடங்கினோம். இன்று, இந்த மண்டபத்தைச் சுற்றி நான் பார்க்கின்றேன். நமது உள்மனதையும் நான் பார்க்கின்றேன். நாம் நம்மை நாமே ஒன்று கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் தேசிய முன்னணியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோமா? விலகி, பெரிக்காத்தானில் மீண்டும் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறோமா?
பெரிக்காத்தான் என்பது வெறும் பெயரளவில் மட்டுமல்ல. பெரிக்காத்தான் என்பது ஓர் இலக்கோடு, அனைவரும் சரிசமம் என்ற உணர்வோடும், நம்பிக்கையோடும், உண்மையான பங்காளிக்துவ உணர்வோடும் உருவாக்கப்பட்ட கூட்டணி ஆகும். அந்தக் கூட்டணிதான் இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றது.
அதுதான் நாம் அடுத்து செல்ல வேண்டிய எதிர்காலப் பாதை என்பதை காலம் வலியுறுத்தினால், நாம் அதிலிருந்து விலகிச் செல்ல மாட்டோம். அந்த வரலாற்றுப் பாதையிலிருந்து நாம் விலகிச் செல்ல மாட்டோம். அந்த வரலாற்றுப் பாதைக்கு நாம் மீண்டும் திரும்புகிறோம்.
கடந்த காலங்களை நாம் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்த்து முன்னேறிச் செல்வோம். நமது முந்தைய அரசியல் பங்காளித்துவ கட்சிகளுக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து, நாம் முன்னேறிச் செல்வோம்.
காரணம், மஇகா-வின் வரலாறு என்பது முடிவடையும் ஒன்றல்ல. மாறாக, புதிதாக தொடங்கப்படும் ஒன்று. அது துணிச்சலும், நம்பிக்கையும், எந்தக் காலத்திலும் தனது போராட்ட உணர்வை விட்டுக்கொடுக்காத ஒரு சமுதாயத்தின் கதையை கொண்ட பயணமாகும்.
இப்போது நம் முன்னே இருக்கும் தருணமானது, இந்த பொதுப்பேரவை நிகழ்ச்சி நிரல்களின் மற்றொரு அங்கம் மட்டுமல்ல. நமது கட்சியின் எதிர்காலத்தை, அடுத்து செல்ல வேண்டிய பயணத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய முடிவாகும்.
பேராளர்களாகிய உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். நாங்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை, நாங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு ஏற்ப, பேராளர்களாகிய நீங்கள் மஇகா செல்ல வேண்டிய பொருத்தமான மாற்று அரசியல் கூட்டணி எது என்பதையும், நாம் செல்ல வேண்டிய பாதை எது என்பதையும், தெளிவான இலக்கு கொண்ட பாதை எது என்பதையும் நீங்கள் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எடுக்கின்ற இன்றைய முடிவு, நமது எதிர்கால பயணத்தின் திசையை கட்டமைக்கும். நமது வலிமையை, நமது முக்கியத்துவத்தை அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு உணர்த்துவதாக அமையும்.
ஆனால், நீங்கள் அவ்வாறு முடிவெடுக்க முடியாவிட்டால், அத்தகைய முடிவை எடுக்கும் அதிகாரத்தை மத்திய செயற்குழுவுக்கும், கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்திற்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதன் மூலம், நாங்கள் தீர்க்கமாகவும், பொறுப்புணர்வுடனும், கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று, நாம் ஒரு முக்கிய முடிவெடுக்கும் அரசியல் பாதையில், ஒரு முக்கிய முடிவெடுக்கும் கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கின்றோம். இந்த தருணத்தில், நாம் எடுக்கப்போகும் முடிவு இந்த மண்டபத்தையும் தாண்டி, வெளியே நாடெங்கும் எதிரொலிக்கும்.
நாம் செல்ல வேண்டிய பாதை எது என்பதை முடிவெடுக்க வேண்டியது நீங்கள்.
இறைவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
இறைவன் இந்திய சமுதாயத்தை ஆசீர்வதிக்கட்டும்.
இறைவன் நமது மலேசியா நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.
-நிறைவு-





