Home Photo News நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?

நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?

224
0
SHARE
Ad
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அஸ்மாவி…

(கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்பாராத வகையில் 3,300 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தேர்தல் வெற்றி காட்டும் அறிகுறிகள் என்ன? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • சாஹிட் ஹாமிடியின் அம்னோ தலைமைத்துவத்திற்கான அங்கீகாரமா?
  • அன்வார் இப்ராகிமின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதற்கான இன்னோர் உதாரணமா?
  • மீண்டும் தலைதூக்கும் தெங்கு ரசாலியின் செல்வாக்கு!
  • அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு தேசிய முன்னணியின் வெற்றிக்கு ஒரு காரணம்!
  • பெர்சாத்து – பாஸ் கூட்டணி முறியலாம்!

நமது நாட்டிலேயே மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாகப் பதவி வகித்தவர் யார் தெரியுமா?

தெங்கு ரசாலி ஹம்சாதான் அவர்! 1974 முதல் 2022 வரை தொடர்ச்சியாக 48 ஆண்டுகள், ஒரே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பெருமைக்குரியவர் தெங்கு ரசாலி. அவருக்கு அந்தப் பெருமையைத் தேடித் தந்த தொகுதி கிளந்தானில் உள்ள குவா மூசாங்.

#TamilSchoolmychoice

1962-ஆம் ஆம் ஆண்டில் இலண்டனில் பட்டப் படிப்பை முடித்து விட்டு, அங்கேயே மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த தெங்கு ரசாலியை நாடு திரும்பச் செய்தது அவரின் தந்தையின் மரணம். அதைத் தொடர்ந்து அம்னோ அரசியலும் அவரை இழுக்க – அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் தெங்கு ரசாலியின் அறிவாற்றலை அறிந்து அவரை வற்புறுத்த – 1962-ஆம் ஆண்டிலேயே அம்னோ உலுகிளந்தான் தொகுதி தலைவரானார்.

நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது தெங்கு ரசாலி, சாஹிட் ஹாமிடி, தெங்கு ரசாலி ஹம்சா

1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 32 வயதிலேயே உலுகிளந்தான் உத்தாரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதற்கடுத்த 1974 பொதுத் தேர்தலில் உலு கிளந்தான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றார். அந்த உலுகிளந்தான் தொகுதிதான் பிற்காலத்தில் குவா மூசாங் எனப் பெயர் மாற்றம் கண்டது.

சரி! நெங்கிரி இடைத் தேர்தல் பற்றிப் பேசாமல் ஏன் இப்போது திடீரென தெங்கு ரசாலி புராணம் என நீங்கள் கேட்பதை உணர முடிகிறது. நெங்கிரியில் அம்னோ-தேசிய முன்னணி பெற்றிருக்கும் அபார வெற்றிக்கு பின்னணியில் காரணமாக இருந்தவர் தெங்கு ரசாலி. அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றுதான் நெங்கிரி.

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்ற நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி. அவர் 9,091 வாக்குகள் பெற – அவரை எதிர்த்து பாஸ் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பெர்சாத்து-பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் 5,739 வாக்குகள் பெற்றார்.

கிளந்தானின் கிராமப்புறத் தொகுதியான நெங்கிரியில் 73.88% வாக்குகள் பதிவாகியிருப்பது இன்னொரு ஆச்சரியம். தேர்தல் ஆணையமே 60 விழுக்காட்டு வாக்களிப்பை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்த வேளையில், அதிக அளவிலான வாக்களிப்பு தேசிய முன்னணியின் கடும் உழைப்பையும், வாக்காளர்களின் ஆர்வத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

தெங்கு ரசாலியின் எழுச்சி

முதுமை காரணமாக அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அடிக்கடி அறைகூவல்கள் விடுக்கப்படும். ஆனால் சில தலைவர்களோ காலங்கடந்த வயதிலும் அரசியலில் சாதிப்பார்கள். துன் மகாதீர் ஓர் உதாரணம் என்றால், இப்போதைக்கு இன்னோர் உதாரணம் தெங்கு ரசாலி.

கிளந்தானில் அம்னோ ஆட்சி செய்தாலும், பாஸ் ஆட்சி செய்தாலும், தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டாலும், தான் தொடங்கிய சொந்தக் கட்சியான செமாங்காட் 46 சார்பில் போட்டியிட்டாலும் குவா மூசாங் தொகுதியில் எப்போதுமே தெங்கு ரசாலிதான் வெற்றி பெற்று வந்தார்.

2022-ஆம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு. அந்த ஆண்டு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் பாஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் தெங்கு ரசாலி. அத்துடன் அவரின் சகாப்தம் முடிந்தது என பலரும் நினைத்துக் கொண்டிக்க – நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக 87-வது வயதில் நியமிக்கப்பட்டார் தெங்கு ரசாலி.

அவருக்குத் துணையாக ஜோகூர் பூலாய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நோர் ஜாஸ்லான் நியமிக்கப்பட்டார். நெங்கிரி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் முழுக்க முழுக்க தெங்கு ரசாலியின் தலைமையில், அவரின் வியூகங்களுக்கு ஏற்ப நடந்தது என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதன் பலனாக, அந்தத் தொகுதியில் தனக்கிருக்கும் நீண்ட கால அனுபவத்தினால், அம்னோவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தந்திருக்கிறார் தெங்கு ரசாலி. தனது தேவையை – அவசியத்தை – அம்னோவுக்கும் உணர்த்தியிருக்கிறார்.

சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடிக்கு மக்களிடையே செல்வாக்கில்லை என்ற பிரச்சாரம் அவரின் அரசியல் எதிரிகளால் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெங்கிரி தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் சாஹிட் ஹாமிடி…

நெங்கிரியில் அவர் அடிக்கடி பிரச்சாரத்திற்கு சென்று தேசிய முன்னணி வெற்றிக்குத் தானும் ஒரு காரணம் என்பதை நிரூபித்திருக்கிறார். தொடர்ந்து ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அம்னோ வெற்றி பெற்றால் அவரின் செல்வாக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் மேலும் உயரும். எதிர்வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ பொதுப் பேரவை, சாஹிட்டின் தலைமைத்துவத்தைப் புகழ்பாடும் களமாக அமையும்.

அம்னோவின் வெற்றிக்கு இளம் தலைவர்களின் உழைப்பும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி நெங்கிரி தொகுதியிலேயே தங்கியிருந்து களப்பணியாற்ற – அம்னோ இளைஞர் பகுதி தலைவர் அக்மால் சாலே இளைஞர் பகுதியின் முழு ஆற்றலையும் இந்தத் தேர்தலில் பயன்படுத்தியிருக்கிறார். சமீப கால சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் மலாய் சமூகத்தினரிடையே பிரபலமாகியிருக்கும் அக்மால் சாலே நெங்கிரி தொகுதியில் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு இளம் வாக்காளர்களை கவர்ந்திருக்கிறார்.

 

பிரச்சாரத்தில் அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் அஸ்மாவி

நெங்கிரி தேசிய முன்னணி வேட்பாளர் அஸ்மாவியும் அம்னோ இளைஞர் பகுதி தலைவர் என்பது இளைய தலைமுறையின் பங்கெடுப்பைக் காட்டுவதாக அமைந்தது.

அம்னோவின் உதவித் தலைவரும் தித்தி வாங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோஹாரி கானியும் நெங்கிரியில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள நெங்கிரி வாக்காளர்களுக்கு விருந்துபசரிப்பு வழங்கி பிரச்சாரம் செய்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அம்னோ தலைவர்களும் நெங்கிரியில் களமிறங்கி பிரச்சாரம் செய்தனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் ஊடுருவி அரசியல் ரீதியாக ஆதரவு பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் உட்கட்டமைப்பும், செல்வாக்கும் இன்னும் அம்னோவின் வசம் இருக்கிறது என்பதையே நெங்கிரி முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அன்வாரின் செல்வாக்கு அதிகரிக்கிறதா?

அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அன்வார் அறிவித்தபோது…

நெங்கிரி இடைத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக (ஆகஸ்ட் 16) அரசாங்க ஊழியர்களுக்கான புதிய ஊதிய உயர்வை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராகிம். நெங்கிரி வாக்காளர் மனங்களில் மகிழ்ச்சியை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கிளந்தான் மக்களில் கணிசமான பிரிவினர் அரசாங்க ஊழியர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தினர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மலாய் வாக்காளர்களை நோக்கி நகரும் வண்ணம் அன்வார் இப்ராகிமின் அரசியல் நடவடிக்கைகள் இருப்பதால், அவரின் செல்வாக்கு முன்பை விட மலாய் வாக்காளர்களிடையே அதிகரித்திருக்கிறது என்பதும் நெங்கிரி முடிவுகள் காட்டும் இன்னொரு அறிகுறி.

ஜசெக பங்கெடுப்பை மலாய் வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை

ஜசெகவுடன் அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் மலாய் சமூகத்தில்  அம்னோ செல்வாக்கை இழந்து விட்டது என்பது வழக்கமாகக் கூறப்படும் இன்னொரு வாதம். அந்த வாதத்தையும் முறியடித்திருக்கிறது நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள்.

கடந்த 2023 தேர்தலில் 810 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அம்னோ இந்த முறை 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பது, ஜசெகவுடன் அம்னோ இணைந்திருப்பதை கிராமப்புற மலாய் வாக்காளர்கள்கூட பொருட்படுத்தவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

ஜசெக பிரச்சாரத்தில் பங்கெடுக்கவில்லை

சாமர்த்தியமாக நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரம் முழுக்க ஜசெக பங்கெடுக்கவில்லை – அல்லது பங்கெடுக்க அம்னோவால் அனுமதிக்கப்படவில்லை.

இதுவும் அம்னோவின் வெற்றிக்கான ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அம்னோ-ஜசெக ஒத்துழைப்பு குறித்த விவகாரங்கள் எதுவும் பிரச்சாரத்தில் பேசப்படவில்லை. பொதுவாக பூர்வகுடி மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜசெக இந்த முறை அந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை.

சீன வாக்காளர்கள் ஏறத்தாழ அறவே இல்லாமல் போனது, ஜசெகவுக்கு இன்னொரு வசதியாகிப் போனது.

பூர்வ குடிமக்களின் ஆதரவு

நெங்கிரி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களில் ஏறத்தாழ 13 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் பூர்வ குடியினர் ஆவர். இவர்களின் வாக்குகளில் பெரும்பான்மை தேசிய முன்னணிக்குக் கிடைத்ததும் வெற்றிக்கான காரணமாகும்.

பூர்வ குடி மக்களின் 90.6 விழுக்காட்டு வாக்குகள் தேசிய முன்னணிக்குக் கிடைத்ததாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும் பூர்வகுடி வம்சாவளியினருமான டத்தோ ரம்லி முகமட் நோர் தெரிவித்திருக்கிறார்.

பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் தேர்வு குளறுபடி

பெரிக்காத்தான் நேஷனல் தோல்விக்கு முஹிடின் யாசினின் பலவீனமான தலைமை ஒரு காரணம் என்றால், வேட்பாளர் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகளும் காரணம். கடந்த 2023-இல் இந்தத் தொகுதி பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த முறையும் பெர்சாத்து கட்சிக்கே ஒதுக்கப்பட்டது.

ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்சாத்து வேட்பாளர்  முகமட் ரிஸ்வாடி முன்பு பாஸ் கட்சியில் இருந்து பெர்சாத்து கட்சிக்கு மாறி வந்தவர். எனவே, தீவிர பாஸ் உறுப்பினர்கள் அவரை கட்சித் துரோகியாகவே பார்த்தனர்.

பெர்சாத்து வேட்பாளரான முகமட் ரிஸ்வாடி பாஸ் சின்னத்தில் போட்டியிட்டார். இதுவும் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்தின் பலவீனத்தைக் காட்டியது. பாஸ் சின்னத்தில் போட்டியிட்டும் – அதுவும் கிளந்தான் மாநிலத்தில் – பெர்சாத்து வேட்பாளர் தோல்வியைத் தழுவியிருப்பது, பெர்சாத்து – பாஸ் உறவில் பல கேள்விகளை, சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

கிளந்தான் மாநில சட்டமன்றத் தொகுதி ஒன்றில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் இடைத் தேர்தலில் தோற்கடிப்பது – அதுவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடிப்பது – நடப்பு அரசியல் சூழலில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் இதனால் பாஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக நாம் ஒரேயடியாக கூற முடியாது. ஆனால், பெர்சாத்து கட்சியின் செல்வாக்கும் அதன் மோதல்கள் மிகுந்த தலைமைத்துவமும் கேள்விக் குறியாகியிருக்கின்றன.

பெர்சாத்துவுக்கு பாஸ் கட்சியினால் இலாபம்தான்! ஆனால் பெர்சாத்துவால் பாஸ் கட்சிக்கு இலாபம் விளைகிறதா? என்ற கேள்வி பாஸ் கட்சியினரிடையே எழுந்திருக்கிறது.

பாஸ்-பெர்சாத்து அரசியல் உறவின் எதிர்கால முறிவுக்கும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பிளவுக்கும் – நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோடியாக அமையலாம்.

-இரா.முத்தரசன்