Home Photo News அன்வார் இந்தியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார்!

அன்வார் இந்தியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார்!

488
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவுக்கான 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்றிரவு (ஆகஸ்ட் 21) நாடு திரும்பினார்.

அவரை இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியும் வழியனுப்பி வைத்தனர்.

அன்வாரை வழியனுப்பி வைக்கும் இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி (நடுவில்)

நேற்று தனது வருகையின் 2-வது நாளில் அவர் மலேசியாவில் முதலீடு செய்ய விரும்பும் மிகப்பெரிய இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இந்திய முதலீட்டாளர்களுக்கான விளக்கக் கூட்டத்திலும் கலந்து கொண்டு மலேசிய அரசாங்கத்தின் பொருளாதார-முதலீட்டுக் கொள்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்திய முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அன்வார்…
இந்திய முதலீட்டாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தில்…

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள முக்கிய இஸ்லாமியத் தலைவர்களையும் அவர் சந்தித்து அனைத்துலக இஸ்லாமிய விவகாரங்கள் குறித்தும், அண்மைய உள்நாட்டு இந்திய முஸ்லீம் விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்தியாவின் முஸ்லீம் தலைவர்களுடன் அன்வார்…

ஜமா மஸ்ஜிட்டின் மௌலானா சைட் அகமட் புக்காரி, ஜாமியாட் உலாமா -ஐ-ஹிண்ட் அமைப்பைச் சார்ந்த மௌலானா மாஹ்முட் ஏ.மடானி, ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலுள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் ஒற்றுமையும் நீடித்துத் தொடர வேண்டும் என்பதையும் தான் வலியுறுத்தியதாக அன்வார் தெரிவித்தார்.

பாஜக தலைவரும் சுகாதார அமைச்சருமான ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு…

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் தலைவரும் சுகாதார அமைச்சருமான ஜே.பி.நட்டா தலைமையிலான குழுவினரையும் அன்வார் சந்தித்தார்.

தனது இந்திய வருகை குறித்து குறிப்பிட்ட அவர், “இந்தியாவுக்கான எனது வருகை எங்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக அமைந்தது. நானும் பிரதமர் மோடியும் ஆழமாக, வெளிப்படைத் தன்மை வாய்ந்த விவகாரங்கள் குறித்து மனம் விட்டுப் பேசினோம். இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் உயர்த்து வண்ணம் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அளவில் வியூக பங்காளித்துவ உறவாக மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகள் மட்டுமின்றி வணிக ரீதியாகவும் சில முன்னேற்றங்களை தனது வருகை ஏற்படுத்தித் தந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

“8 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய வணிகப் பரிமாற்றங்களையும் எனது வருகை உருவாக்கியுள்ளது. செம்பனைத் துறை, செம்பனை சார்ந்த உற்பத்தித் துறைகள், இராசயன பொருட்கள் உற்பத்தி, எண்ணெய், எரிவாயு, விமானங்களுக்கான உபரிப் பாகங்கள் உற்பத்தி – ஆகிய துறைகளில் வணிகப் பரிமாற்றங்கள் வெற்றிகரமாக செயல் வடிவம் கண்டுள்ளன. நட்பான, சிறந்த விருந்தோம்பலை எனக்கும் எங்களின் குழுவினருக்கும் வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கும் அமைச்சுகள், அரசாங்க இலாகாக்கள், ஊடகவியலாளர்கள், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஆகியோரும் இந்த வருகை வெற்றிகரமாக நிறைவேறியதற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.