Home நாடு ரம்லான் ஹாருண் : தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர்

ரம்லான் ஹாருண் : தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர்

1007
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோ ரம்லான் ஹாருண் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்தை அரசாங்கத்திற்கான தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுக்கி அலி அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

ரம்லானின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், மலேசிய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 114(1) – இன் கீழ் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கிராமப்புற, மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளரான ரம்லான் கடந்த மே 30-ஆம் தேதி அரசாங்க சேவையில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையத்தின் தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றிய அப்துல் கானி சாலே மே 9-ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 2020 முதல் தேர்தல் ஆணையத்தின் தலைவராக கானி பணியாற்றி வந்தார்.

நிலவள மேலாண்மைத் துறையில் மலேசிய முதுகலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ரம்லான். வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் துணை இயக்குநராக அவர் தனது அரசாங்க சேவையைத் தொடங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவருக்கான சவால்கள்

மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2022-இல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் தவணையை அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் பிரச்சனையின்றி முழுமையாகக் கடந்தால் அடுத்த பொதுத் தேர்தல் 2027-இல் நடைபெறும்.

புதிதாக நியமனம் பெறும் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாருணுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

அவருக்கு காத்திருக்கும் முதல் கட்டப் பணி சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது.

அடுத்து அவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் தொகுதிகளின் மறுசீரமைப்பாகும். நீண்ட காலமாக மலேசியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்படவில்லை. தொகுதிகளின் மறு சீரமைப்பும் நடைபெறவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது தொகுதிகள் மறுசீரமைப்புக்கான பணிகள் நடந்து வருவதாக அறியப்படுகிறது. இந்தத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது. அத்துடன் நியாயமாக மேற்கொள்ளப்பட்டால் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக சபா, சரவாக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொகுதிகள் மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைக்கக் கூடும்.

புதிய தொகுதிகள் மறுசீரமைப்பின்படி சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்காக 74 தொகுதிகளை அந்த மாநிலங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது 57 தொகுதிகளை மட்டுமே அந்த மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.