புத்ரா ஜெயா : மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2022-இல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் தவணையை அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் பிரச்சனையின்றி முழுமையாகக் கடந்தால் அடுத்த பொதுத் தேர்தல் 2027-இல் நடைபெறும்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைவர் அப்துல் கானி சாலே பதவி ஓய்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். அந்த நியமனத்திற்கு மாமன்னரும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதிதாக நியமனம் பெறும் தேர்தல் ஆணையத் தலைவருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் தொகுதிகளின் மறுசீரமைப்பாகும். நீண்ட காலமாக மலேசியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்படவில்லை. தொகுதிகளின் மறு சீரமைப்பும் நடைபெறவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது தொகுதிகள் மறுசீரமைப்புக்கான பணிகள் நடந்து வருவதாக அறியப்படுகிறது. இந்தத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது. அத்துடன் நியாயமாக மேற்கொள்ளப்பட்டால் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக சபா, சரவாக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொகுதிகள் மறுசீரமைப்பின்படி சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். தற்போது அத்தகைய நிலைமை இல்லை. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்காக 74 தொகுதிகளை அந்த மாநிலங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது 57 தொகுதிகளை மட்டுமே அந்த மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.