கொழும்பு: இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவெண்ட் (ஐஎஸ்ஐஎல்) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அபு பக்கர் அல் பாக்தாதி காணொளி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். சுமார் 18 நிமிடங்களுக்கு நீடிக்கும் அந்த காணொளியில் சமீபத்தில் நடந்த இலங்கை தாக்குதல் குறித்து அவன் பேசியுள்ளான். இந்தக் காணொளி தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அனைத்துலக பயங்கரவாதியாக இவனை ஐநா அறிவித்திருந்தது. இவனை பற்றிய தகவல் அளித்தால் சன்மானத் தொகையாக 25 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
உலக நாடுகள் பலவற்றில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட இவன், உலகின் மிக கொடூரமான பயங்கரவாதிகளில் ஒருவனாக கருதப்படுகிறான்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவன் தற்போது இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளான். தன் சக போராளிகள் முன்னிலையில் உரையாற்றும் அவன், உடல் ரீதியாக மாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது. உடம்பில் சதைப் போட்டும், தாடி வளர்த்தும் அவன் காட்சியளிக்கிறான்.
அந்த காணொளியில் சமீபத்தில் நடந்த இலங்கை தாக்குதல் குறித்துப் பேசியுள்ளான். ஆகவே, இது சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரியவந்துள்ளது.