இலண்டன் – இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழந்திருக்கின்றன.
அடுத்தடுத்து, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சில ஆட்டங்கள் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி சவுத் ஹேம்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மழை காரணமாக அந்த ஆட்டம் இரத்து செய்யப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் 29 ஓட்டங்களை தென் ஆப்பிரிக்கா எடுத்த நிலையில் மழையின் இடையூறினார் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து இரண்டு குழுக்களுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
அடுத்த நாள் ஜூன் 11-ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறவிருந்த இலங்கை, வங்காளதேசம் இடையிலான ஆட்டமும் மழை காரணமாக ஆட்டம் தொடங்கப்படாமலேயே இரத்து செய்யப்பட்டது.
நேற்று ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மட்டும் முறையாக நடைபெற, ஆஸ்திரேலியா 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது.
இன்று வியாழக்கிழமை பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியாகும். இரண்டு குழுக்களுமே இதுவரை தோல்வியடையாமல் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வெல்லப் போவது யார் என்ற கேள்வி கிரிக்கெட் இரசிகர்களிடையே பரபரப்பாக உலவி வந்தது.
ஆனால், மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தொடங்கப்பட வேண்டிய ஆட்டம் இரண்டு மணி நேரம் கடந்தும் மழை காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் இழுபறியாக இருப்பது இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்படுமா – அல்லது 50 ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடருமா என்ற கேள்விகளுடன் கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
உலகக் கிண்ணத்திற்கான 10 நாடுகள் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கின்றன. இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.