கோலாலம்பூர்: புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்று கருதப்படுவதால் அதனை ஒழிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கருத்திற்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு (எம்டிஇஎம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“இது பூமிபுத்ரா சமூகத்திற்கும் எம்டிஇஎம்-க்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று எம்டிஇஎம் தலைமை நிருவாக அதிகாரி அகமட் யாசிட் ஓத்மான் கூறினார்.
எந்தவொரு ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல், கடந்த 2014-ஆம் ஆண்டில் பூமிபுத்ராக்களின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 16,066 ரிங்கிட் மட்டுமே என்றும், பூமிபுத்ரா அல்லாதவர்களின் வருமானம் ஆண்டுக்கு 74,067 ரிங்கிட் என்று யாசிட் கூறினார்.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி, குறிப்பிட்ட ஒரு சமுகத்தைக் காட்டிலும் ஒட்டு மொத்த மக்களின் தேவைகளின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கையைக் கொண்ட பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அன்வார் தெரிவித்திருந்தார்.