சென்னை: மறைந்த திமுக கட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி ஊர்வலம் தொடங்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் கருணாநிதி காலமானார். தொடர்ந்து, 8-ஆம் தேதி அவரது உடல் இலட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த அமைதி பேரணியில், கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே சாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பேரணி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாலை முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.