கோலாலம்பூர்: ஜோகூர் சீன பள்ளி அறங்காவலர் பதிவு இரத்து செய்யப்பட்டது சாதாரணமானது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் அல்ல என்றும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
“தடைசெய்த சில சங்கங்கள் அமைச்சர்களிடம் முறையீடு செய்துள்ளன. இது அவ்வகையான விவகாரமாகும். வழக்கமான விசயம். அவர்கள் இன்று (நேற்று புதன்கிழமை) எனக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ முறையீட்டை சமர்ப்பித்தார்கள். அது பரிசீலிக்க சங்கப் பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, மொகிதின் அச்சங்கத்தின் நான்கு பிரதிநிதிகளை சுமார் அரை மணி நேரம் சந்தித்தார்.
அச்சங்கத்தின் தலைவரும், சீன பள்ளி வாரிய அறங்காவலர் குழுவின் (டோங் சோங்) தலைவருமான டான் தய் கிம், அதன் துணைத் தலைவர் யாங் யின் சோங், மத்திய குழு உறுப்பினர் லோ சீ சோங் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் கேஎப் வோங் ஆகியோர் அமைச்சரை சந்தித்தனர்.
இப்பிரச்சனையைத் தீர்க்க சங்கங்கள் சட்டம் 1966-இன் கீழ் உள்ள தேவைகளுக்கு இச்சங்கம் இணங்க வேண்டும் என்று மொகிதின் வலியுறுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜோகூர் சீன பள்ளி வாரிய அறங்காவலர் பதிவு இரத்து செய்யப்பட்ட கடிதத்தை சங்கப் பதிவாளர் வெளியிட்டது.
ஆசிரியர்கள் ஈடுபாடு தொடர்பாக சங்கத்தின் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் தொடர்பாக சங்கப் பதிவாளருக்கு விளக்கத் தவறியதாகக் கூறப்பட்டதால் ஜோகூர் மாநில டோங் சோங் பதிவு இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.