சிட்னி: பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவின் தெருக்களில் பேராட்டத்தில் இறங்கியதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இந்த வெகுஜன அணிவகுப்பை இளம் ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கால் தூண்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேறி நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் (ஐநா) நடைபெறும் பருவநிலை மாற்ற உச்சமாநாட்டிற்கு முன்னதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
புதிய நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிவாயு திட்டங்கள் எதுவும் தேவையில்லை எனவும், 2030-க்குள் 100 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடைபெற்றாக வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசாங்கத்திடம் போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.
அரசாங்கம் அனைத்து புதைபடிவ எரிபொருள் தொழில் தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களுக்கும் ஒரு நியாயமான மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.