கோலாலம்பூர்: டெலிகாம் மலேசியா (டிஎம்) தமது ‘யுனிஃபை ஏர்’ அதிவேக கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை தற்போதுள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு விரிவுபடுத்துகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை ஆரம்பக்கட்டத்தில், முன்கூட்டியே ஸ்ட்ரீமிக்ஸ் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
ஸ்ட்ரீமிக்ஸ் அல்லாத பயனர்களுக்கான ஆரம்ப விலையாக 129 ரிங்கிட் விலையிலிருந்து, யூனிஃபை ஏர் ஒரு மாதத்திற்கு 79 ரிங்கிட்டுக்கு வாவேய் பி618 கம்பியில்லா திசைவி மூலம் வழங்கப்படும் என்று டிஎம் கூறியுள்ளது. இத்திட்டமானது வரம்பற்ற இணைய சேவையை வழங்குகிறது.
பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் ஆகிய இரண்டிற்குமான யுனிஃபை ஏர் சிறந்த வேகமாக 20எம்பிபிஎஸ்சை வழங்குகிறது.
வாவேய் பி618 திசைவி ஒரே நேரத்தில் 63 சாதனங்களை இணைக்க முடியும் என்றும், 12 மாத உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்றும் டிஎம் தெரிவித்துள்ளது.
இந்த சேவையானது சந்தாதாரரின் வீட்டிற்கு வெளியே கூட பயன்படுத்தப்படலாம் என்றும், யுனிஃபை எல்டிஇ செயலெல்லை (Unifi’s LTE coverage) வரம்பிற்குள் எந்த இடத்திலும் இணைக்கப்படலாம் எனவும் டிஎம் தெரிவித்துள்ளது. டிஎம்மின் வலைத்தளத்தின் தரவுகளின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு, மலாக்கா, ஜோகூர் மற்றும் பினாங்கில் இந்த இணைப்பைக் காண முடிகிறது.
மலேசியா தினத்தில் தொடங்கிய இந்த விளம்பரமானது மேற்கொண்டு அறிவிக்கப்படும் நாள் வரை நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.