Home வணிகம்/தொழில் நுட்பம் டெலிகோம் மலேசியா பங்குகள் – 714 மில்லியன் ரிங்கிட் ஒரே நாளில் சரிவு

டெலிகோம் மலேசியா பங்குகள் – 714 மில்லியன் ரிங்கிட் ஒரே நாளில் சரிவு

1465
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இணைய சேவைகள் வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டெலிகோம் மலேசியா பெர்ஹாட். ஒரு காலத்தில் தொலைபேசி சேவையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வந்த டெலிகோம் மலேசியா பின்னர் கைத்தொலைபேசி நிறுவனங்களின் வருகையால் அந்த ஆதிக்கத்தை இழந்தது. எனினும் அகண்ட அலைவரிசை மூலம் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் இணைய சேவை வழங்கி அதன் மூலம் வருமானம் பெருகியதால் பங்குச் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டெலிகோம் மலேசியா திகழ்ந்து வந்தது.

ஆனால் தற்போது பைபர் ஒப்டிக்ஸ் (fiber optics) எனப்படும் கம்பி இழைகளின் வழியாக அகண்ட அலைவரிசை கொண்ட இணைய சேவைகளை வழங்குவதற்கு மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டெலிகோம் மலேசியா கொண்டுள்ள வசதிகளை (குழாய்கள் மற்றும் பூமிக்கு அடியில் செல்லும் கம்பிகள் கொண்ட சுரங்கப் பாதைகள்) கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங் அறிவித்திருந்தார்.

மேலும் தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி) போன்ற நிறுவனங்களும் தாங்கள் ஏற்கனவே கொண்டுள்ள கம்பி இழைகளிலான (Fibre) உட்கட்டமைப்பைக் கொண்டு அகண்ட அலைவரிசைக்கான இணைய சேவைகள் வழங்கலாம் என்றும் கோபிந்த் சிங் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் அகண்ட அலைவரிசை இணைய சேவை மேலும் அதிவிரைவுடனும் அதே வேளையில் தற்போதிருப்பதை விட பாதிக் கட்டணத்திலும் வழங்கப்பட வேண்டும் என கோபிந்த் சிங் அடிக்கடி அறிவித்து வருகிறார்.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இந்தத் துறையில் டெலிகோம் மலேசியாவின் ஆதிக்கம் இனியும் இருக்காது – அதன் வருமானமும் பாதிக்கப்படும் – என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 3) பங்குச் சந்தையில் டெலிகோம் மலேசியாவின் பங்குகள் 19 காசுகள் வரை குறைந்து ஒரு பங்கின் விலை 3 ரிங்கிட் 68 காசாக வீழ்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் டெலிகோம் மலேசியாவின் பங்குச் சந்தை மதிப்பு 714 மில்லியன் ரிங்கிட் சரிந்தது.

புரோட் பேண்ட் எனப்படும் நிரந்தர அகண்ட அலைவரிசை இணைய சேவைகள் தற்போது 2.5 மில்லியன் இணைப்புகளின் வழியாக மலேசியாவில் வழங்கப்படுகின்றன. ஆனால், மலேசியாவில் இந்த சேவைகளைப் பெறத் தகுதியுள்ள 6.5 மில்லியன் இல்லங்கள் இருக்கும் நிலையில் 2.5 மில்லியன் இல்லங்களுக்கு மட்டுமே இந்த இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால் இந்தத் துறையில் இன்னும் கூடுதலான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.