அலோர் ஸ்டார்: மாநில அரசு திட்டங்களின் அபிவிருத்தியை நாசப்படுத்த முயற்சிப்பதாகக் கண்டறியப்பட்டால், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கெடா மாநில அரசு தயங்காது என்று மாநில மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை தீவிரமாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் வளர்ச்சி முயற்சிகளை முறியடிப்பதாக கண்டறியப்பட்ட பல ஊழியர்களை அரசு அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, எதிர்க்கட்சி நடவடிக்கைகளில் அனைத்து அரசு ஊழியர்களும் ஈடுபடக்கூடாது என்றும், சமீபத்தில் புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெற்ற தேசிய ஒன்றினைப்பு பேரணியில் கலந்துகொண்டது உட்பட இனி தீவிரமாக ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
“அனைவரும் நம்பிக்கை கூட்டணியை ஆதரிக்கவும், எதிர்க்கட்சியை நிராகரிக்கவும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நிலைப்பாடு அதுவல்ல. ஆனால் அவர்களின் அரசியல் விருப்பங்கள் கேள்விக்குறியானவை. அரசாங்க நிருவாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்களை நாம் ஊக்குவிப்பதில்லை” என்று நேற்று இரவு புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
“முன்பு நாம் மென்மையாகவும் விவேகமாகவும் இருந்தோம். ஆனால், இப்போது அவ்வாறான செயலில் இருப்பவர்களை நாங்கள் கண்காணிப்போம் என்று எச்சரிக்கிறோம். எச்சரிக்கைக்குப் பிறகும், அவர்கள் தீவிரமாக ஈடுபட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என்று அவர் தெரிவித்தார்.