கோலாலம்பூர்: மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்எஸ்எம்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாஹ்ரா அப்துல் வாஹாப் பென்னர் மற்றும் அவரது மகன் அப்துல்ஸீஸ் வான் ருஸ்லான் ஆகியோர் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டனர்.
மொத்தமாக 5.7 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 37 ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சாஹ்ரா 5,718,000 ரிங்கிட் சம்பந்தப்பட்ட 33 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மகன் 160,000 ரிங்கிட் சம்பந்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளும் எம்ஏசிசி சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும்.
இந்த குற்றங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 2015 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிபதி அஹுரா சாஹ்ராவுக்கு இரண்டு நபர் உத்தரவாதத்துடன் 300,000 ரிங்கிட் பிணைப் பணமும், அப்துல்ஸீஸுக்கு ஒரு உத்தரவாதத்துடன் 70,000 ரிங்கிட் பிணைப்பணமும் விதித்தார். பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள சாஹ்ரா இன்று அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.