கோலாலம்பூர்: உத்துசான் மலேசியா மூடப்பட்டது குறித்து பல்வேறு தரப்புகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், இந்நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக இருந்து பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைப்பதற்கு யார் காரணமென்ற சர்ச்சை பரவலாக விவாதிக்கபட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் ஆலோசகர் மீது பத்திரிகையாளர் அப்துல் காடிர் ஜாசின் குற்றம் சுமத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவரது மருமகன் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்ட கைரி, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான முதல் அவதூறின் போது, பிரதான ஊடகங்கள் பக்கச்சார்பாக இருந்து செய்திகள் வெளியிட்டதை குறிப்பிட்டார்.
“பிரதான ஊடகங்களின் வீழ்ச்சி அன்வாரின் முதல் ஓரினச் சேர்க்கை அவதூறில் தொடங்கியது. அப்போது அப்துல் காடிர் ஜாசின் என்ற நபர் அந்த என்எஸ்டி ஆசிரியராக இருந்தார்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா பிரதமராக இருந்த போது தொடங்கிய அன்வாரின் இரண்டாவது ஓரினச் சேர்க்கை வழக்கின் செய்தி வெளியீட்டிற்கும் எந்தவொரு வேறுபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகரான காடிர், கடந்த 1988 முதல் 2000 வரை நியூஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் ஆசிரியராக இருந்தார்.
1998-ஆம் ஆண்டில், மகாதீர், அன்வாரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்தார். பின்பு அன்வார் மீது ஓரினர் சேர்க்கை மற்றும் அதிகார அத்துமீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தமது முதல் மற்றும் இரண்டாவது ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் எதிரிகளால் வடிவமைக்கப்பட்டவை என்று அன்வார் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிமும் காடிருடன் உடன்படவில்லை. மகாதீர் காலத்தில் பிரதான ஊடகங்கள் வீழ்ச்சியடையத் தொடங்கின என்று அவர் கூறினார்.
1எம்டிபி ஊழலில் ஈடுபட்டதாகக்க் கூறப்பட்டு, அம்னோவின் கணக்குகள் நம்பிக்கைக் கூட்டணி நிருவாகத்தின் கீழ் முடக்கப்பட்டதால் உத்துசான் மெலாயு பெர்ஹாட்டுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று புதன்கிழமை பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.