நியூ யார்க்: ஐக்கிய நாடுகள் சபைக்கு தரவேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாடுகள் இன்னும் செலுத்தாத நிலையில், தற்போது, அது தொடர்ந்து செயல்பட போதுமான பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மொத்தம் 193 நாடுகளில் 129 நாடுகள் ஐநாவுக்கு தரவேண்டிய பணத்தைத் தந்துவிட்டதாகவும், எஞ்சிய நாடுகள் உடனடியாக தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் மோசமான பணத்தட்டுப்பாட்டை ஐநா சந்தித்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் பணம் கையிருப்பு செலவாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்நிலை தொடர்ந்தால் ஐநா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிடப்பட்டாளர்.
அக்டோபர் 8-ஆம் தேதி வரை 1.99 பில்லியன் டாலர்கள் தொகையை இதர நாடுகள் கொடுத்துள்ளன. மீதமுள்ள நாடுகள் கொடுக்க வேண்டிய தொகை 1.3 பில்லியன் என்று ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான நிதிப் பற்றாக்குறை ஐநாவில் ஏற்படுவது இது முதல் முறையல்ல, கடந்த ஆண்டும் ஐநா நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.