Home உலகம் அன்வாரின் ஐ.நா. உரை – ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரேன், பருவநிலை மாற்றம் பிரச்சனைகள் பேசினார்

அன்வாரின் ஐ.நா. உரை – ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரேன், பருவநிலை மாற்றம் பிரச்சனைகள் பேசினார்

468
0
SHARE
Ad

நியூயார்க் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் (மலேசிய நேரம்) ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே சமூக ஊடகங்களில் பங்கேற்பாளர்கள் விடுத்த கருத்துகளின் அடிப்படையில் அன்வாரின் உரைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளும், கல்வியும் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். அப்படிச் செய்யாதது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

அதே போல பாலஸ்தீனத்தில் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உலக வரலாற்றில் மிகக் கடுமையான வெப்பத்தை அண்மையில் நாம் எதிர்கொண்டிருப்பது பருவநிலை மாற்றத்தின் அபாயத்தைக் குறிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர் அதற்காக ஐநா தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-ஆம் ஆண்டுப் பொதுப் பேரவையில் மலேசியாவின் சார்பில் இன்று அன்வார் உரை நிகழ்த்தியது அவரைப் பொறுத்தவரை ஒரு வரலாற்று பூர்வ நிகழ்வாகும்.

காரணம் கடந்த 25 ஆண்டு காலமாக நாட்டின் பிரதமர் பதவியை அடைய கடுமையாக அரசியல் போராட்டம் நடத்திய அவர், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கலந்து கொள்ளும் முதல் ஐக்கிய நாடுகள் மன்ற பொது பேரவை கூட்டம் இதுவாகும்.

அன்வார் உரை நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.