குவாந்தான்: இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்களின் நெருங்கிய நண்பரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நண்பர்கள் இன்று திங்கட்கிழமை குவாந்தான் கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களான, டி.புகழேந்திரன் (20), அவரது நண்பர் என்.சதிஸ்குமார் (27) ஆகியோர் ராஜு அவாவை (27) கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியன்று அதிகாலை 3 முதல் 5 மணி வரை இந்த குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், நீதிபதி நூருநாயிம் அப்துல்லா முன் அவர்களுக்கான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் எந்த ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் இருவருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
மேலும், இந்த வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி நீதிமன்றம் அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி, குவாந்தான்–மாரான் சாலையின் பாயா புங்கார் ஏரியில், கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில், மிதந்து கிடந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த நபர் இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாம் என்று கூறப்பட்டது.