கோலாலம்பூர் : அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனாமோ பே சிறைச்சாலையில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகமட் பாரிக் அமின், முகமட் நாசிர் லெப் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டு தற்போது மலேசியா திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக, மறுவாழ்வு திட்டத்தில் அவர்களுக்கு உரிய போதனைகள் வழங்கப்பட்டு குடும்பத்தினருடன் அவர்கள் இணைந்து வாழ வசதிகள் செய்து தரப்படும் என மலேசியக் காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
2006-இல் அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர் என்றும் ரசாருடின் மேலும் தெரவித்தார். அவர்கள் இருவரும் மீண்டும் சமுதாயத்தில் இணைந்து கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு முழுமையான மறுவாழ்வுத் திட்டப் பயிற்சிகள் வழங்க உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளதாகவும் ரசாருடின் கூறினார்.
அமெரிக்க அதிகாரிகள் அந்த இருவரையும் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) மலேசியக் காவல் துறையிடம் ஒப்படைத்ததாகவும் ஐஜிபி மேலும் குறிப்பிட்டார்.
நாடு திரும்பியிருக்கும் கைதிகள் இருவரும் சுமுகமான வாழ்க்கை முறைக்குத் திரும்பவும் சமுதாயத்தில் மீண்டும் இணையவும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் ஐஜிபி கூறினார்.
2024 தொடக்கத்தில் 2002 பாலி (இந்தோனிசியா) குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பங்கெடுத்ததாக தங்களின் குற்றத்தை அவர்கள் இருவரும் ஒப்பினர்.
சிஐஏ என்னும் அமெரிக்காவின் மத்திய புலானய்வு அமைப்பின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
11 செப்டம்பர் 2001-இல் நடைபெற்ற நியூயார்க் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கட்டமைத்த சிறப்பு பாதுகாப்பு நீதிமன்றத்தால் அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் அவர்கள் குவாண்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களுடன் இந்தோனிசியாவின் ஹம்பாலி என அழைக்கப்படும் என்செப் நூர்ஜமான் என்பவனும் விசாரிக்கப்பட்டான்.
ஹம்பாலி மீது 2002, 2003 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத, கொலை, சதியாலோசனை சம்பவங்களின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறான். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்.
ஜெமாஆ இஸ்லாமியா இயக்கத்தின் தலைவனான ஹம்பாலிக்கு எதிராக மலேசியர்களான முகமட் பாரிக் அமின், முகமட் நாசிர் லெப் ஆகிய இருவரும் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.