சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த கைதி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
மாநகரம் திரைப்படத்தை இயக்கிய இவர் நடிகர் கார்த்தியை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்து என்ன நடக்கும் எனும் அளவிற்கு திரைக்கதை நகர்த்தப்பட்டிருந்தது.
இப்படத்தின் இறுதி காட்சியில் கார்த்தி தன் மகளை அழைத்துக்கொண்டு செல்வார், அப்போது படத்தின் வில்லன் பேசும் ஒரு வசனம் இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அது கைதி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பை ஏரற்படுத்தியது.
இதற்கிடையில், நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு இரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் தலைத்தூக்கியுள்ளது.
விஜய்யின் 64-வது படத்தை இயக்கி முடித்ததும், லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2′ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.