கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணிக்கும் ஜசெகவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதாக ஆங்காங்கே அரசல் புரசலாகக் கேள்வி பட்டு வந்தாலும், தற்போது முகநூலில், பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவின் காணொளி ஒன்று அதனை பறைசாற்றும் வண்ணமாக அமைந்துள்ளது.
மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தாம் தனியாக ஜசெகவுடன் போராட வேண்டியிருப்பதாக அக்காணொளியில் அவர் கூறியுள்ளார்.
இக்காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதுடன், இதனால், அரசு தரப்பு மற்றும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“பேராக்கில், நான் ஜசெக தரப்புடன் தனியாக போராடி வருகிறேன்.”
“மலாய் நிலத்தைப் பாதுகாக்கவும், நம் மதத்தை வேரூன்றவும் நான் விரும்புகிறேன்,” என்று பேராக் மந்திரி பெசார் போல் தோற்றமளிக்கும் நபர் பொதுவில் ஒரு குழுவினரிடம் கூறுகிறார்.
“நான் அதனை மெதுவாக செய்து கொண்டிருக்கிறேன். அங்கே (பேராக்) என் அம்னோ நண்பர்கள் என்னை இப்படி திட்டவில்லை,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இதற்கிடையில், இது குறித்து கருத்துரைத்த உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின், அகமட் பைசாலின் அக்கூற்று அவரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். மேலும், ஜசெக நம்பிக்கைக் கூட்டணியின் ஓர் அங்கம் என்பதை மொகிதின் அகமட் பைசாலுக்கு நினைவூட்டினார்.