கோலாலம்பூர்: நாட்டில் இனக்குழுக்களுக்கிடையே உள்ள சாதனைகளின் இடைவெளி காரணமாகவே, தென் கொரியா மற்றும் சீனாவைப் போன்ற வளர்ச்சி அடைந்த நாடாக மலேசியா உருப்பெறும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
சில இனங்களுக்கு இடையிலான சாதனை இடைவெளி மிகப் பெரிதாக இருப்பதால், நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை உருவாக்கி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“தற்போது 2 ஆசிய நாடுகள் வளர்ச்சி அடைந்த நிலையை எட்டியுள்ளன, அதாவது தென் கொரியா மற்றும் சீனா. மலேசியா ஏன் அதன் பாதையில் செல்ல முடியவில்லை? நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.”
“பல இனங்கள் நிறைந்தது நம் நாடு. துரதிர்ஷ்டவசமாக இந்த இனங்களின் சாதனைகள் ஒரே மாதிரியாக இல்லை. சிலர் முன்னோக்கி நகர்கிறார்கள், சிலர் இன்னும் பின்னால் உள்ளனர்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை கூறினார்.
ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி தொடர்ந்து விரிவடையும் நிலை ஏற்பட்டால், ஐரோப்பாவில் உள்ளதைப் போன்ற புரட்சிகர இயக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று தாம் கவலைப்படுவதாக மகாதீர் கூறினார்.
“இந்த நிலைமை எந்த நாட்டிற்கும் ஆரோக்கியமானதல்ல. ஒரு தனி இனம் முன்னேற்றகரமாக இருந்தால், இந்த மக்கள் தங்கள் சாதனைகளை பிரதிபலிக்கிறார்கள் என்றால், நம் நாடு பாதுகாப்பாக இருக்காது, ஏனென்றால் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கான இடைவெளி எந்த நாட்டிற்கும் ஒரு பிரச்சினையே.” என்று அவர் தெரிவித்தார்.