கோலாலம்பூர்: துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு (டார் யூசி) எதிரான அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
ஜசெக பொதுச் செயலாளர் கடந்த ஒரு வருடமாக 50 வயதான டார் யூசியில் தலையிட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
“நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி நவம்பர் 26-ஆம் தேதி திடீரென டார்சி ஆளுநர் கூட்டத்தில் ஒரு கடிதத்தை வழங்கியுள்ளார். அறங்காவலர்கள் அனைவரும் மசீச உறுப்பினர்கள் என்பதால் வாரியம் சட்டவிரோதமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
“இது அதிர்ச்சியாக இருந்தது. ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஓர் அறக்கட்டளையின் உறுப்பினராவதைத் தடுக்கும் சட்டம் அல்லது அரசியலமைப்பு விதி உண்டா? ”என்று டாக்டர் வீ கேள்வி எழுப்பினார்.
இந்த ஆண்டும் மற்றும் அடுத்த ஆண்டும், டார் யூசிக்கு அரசாங்க வழங்கக்கூடிய மானியங்களில் மொத்தம் 60 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மசீச உடனான உறவுகளைத் துண்டித்துவிட்டால் மட்டுமே டார் யூசிக்கு மானியங்களை வழங்குவதாக லிம் கூறினார்.
தேசிய முன்னணி அரசாங்கம் 1969 மற்றும் 2018-க்கு இடையில் டார்யூசிக்கு 1.0123 பில்லியன் ரிங்கிட் மானியங்களை வழங்கியுள்ளது.
“நான் லிம் குவான் எங்கிற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், டார்யூசியை அடக்குவதை நிறுத்துங்கள், அரசியல் துன்புறுத்தல்களை நிறுத்துங்கள்.”
“டார்யூசி மசீசவால் நிறுவப்பட்டது. நாங்கள் மற்றும் சீன சமுதாயம் இணைந்து ஆதரிக்கும் இந்த உயர்கல்வி நிறுவனம் குறைந்தது 200,000 மாணவர்களை வளர்த்துள்ளது” என்று டாக்டர் வீ நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற கட்சியின் 66-வது ஆண்டு பொதுக் கூட்டத் தொடக்க உரையில் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற மசீச பொதுக் கூட்டத்தின் போது, மசீச தனது அங்கத்துவத்தை பிற இனத்தவர்களுக்கும் திறக்க இருப்பதை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.