பாக்தாத்: ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 47 பேர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலையில் நான்கு சக்கர வாகனம் மற்றும் பிக்–அப் வாகனங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளோடு, மத்திய பாக்தாத்தில் உள்ள அல்–கலானி சதுக்கத்தில் நுழைந்து, சதுக்கத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“16 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், துப்பாக்கி ஏந்தியவர்கள் பல கட்டடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடியதாக அந்த அதிகாரி கூறினார்.
டைக்ரிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்–ஜும்ஹூரியா மற்றும் அல்–ரஷீத் வீதிகளின் ஒரு பகுதியை நூற்றுக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர், அத்துடன் அருகிலுள்ள அல்–ஜும்ஹூரியா, அல்–சினாக் மற்றும் அல்–அஹ்ரரின் பாலங்களையும் முடக்கி உள்ளனர்.
விரிவான சீர்திருத்தம், ஊழலுக்கு எதிரான போராட்டம், சிறந்த பொது சேவைகள் மற்றும் அதிக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் கோரி அக்டோபர் தொடக்கத்தில் இருந்து தலைநகர் பாக்தாத் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஈராக்கின் பிற நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.