வாஷிங்டன் – ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தாயிப் ஹெஸ்புல்லா மிலிட்டியா (Kataib Hezbollah militia) போராளிக் குழுக்களுக்கு எதிராக ஈராக், சிரியா நாடுகளில் அமெரிக்கா தொடுத்த விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதுகுறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
லெபனானில் ஷைட் இயக்கமான ஹெஸ்புல்லா இந்தத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதோடு ஈராக்கின் இறையாண்மைக்கு எதிரான செயல் இதுவெனச் சாடியது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பல்களைத் துடைத்தொழிப்பதில் உதவி புரிந்த குழுக்களை நோக்கி அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ஹெஸ்புல்லா கூறியது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 29) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து அந்நாட்டின் உயர்நிலை பாதுகாப்பு ஆலோசகர்கள் விளக்கம் அளித்தனர் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறினார்.