Home One Line P2 அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது – அதிபர் வழங்கினார்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது – அதிபர் வழங்கினார்

874
0
SHARE
Ad

புதுடில்லி – ஞாயிற்றுக்கிழமை (29 டிசம்பர்) இங்குள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகப் போற்றப்படும் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார்.

சினிமாத் துறையைச் சார்ந்தவர்களில் அளப்பரிய சேவைகளை வழங்கிய நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சினிமாத் துறையைத் தோற்றுவிக்கப் பாடுபட்டவரும், இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படுபவருமான கோவிந்த் பால்கே என்பவரின் நினைவாக இந்த விருது 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

தாதா சாஹேப் பால்கே விருதைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய 77 வயதான அமிதாப் “இந்த விருதுக்கு என் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், இந்த அறிவிப்பு எனது பங்களிப்பு இத்துடன் முடிந்து விட்டது, இனி இல்லத்தில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க வேண்டியதுதான் என்பதன் அறிகுறியா என முதலில் நினைத்தேன். எனினும் நான் செய்து முடிக்க வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன என்றே கருதுகிறேன்” எனக் கூறினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு கேடயத்தையும், 1 மில்லியன் இந்திய ரூபாய் பரிசுப் பணத்தையும் தாதா சாஹேப் பால்கே விருது கொண்டுள்ளது.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்திருக்கும் அமிதாப், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது பல படங்கள் வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கின்றன. 77 வயதிலும் போட்டி போட்டுக் கொண்டு தனது சிறந்த நடிப்புத் திறனை வெளிக் கொணரும் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் திவால் நிலைமைக்கு ஆளாகி பின்னர் ‘கோன் பனேகா குரோர்பதி (தமிழில் : நீங்களும் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?”) நிகழ்ச்சியின் மூலமும் மீண்டெழுந்த அமிதாப் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும், பல விளம்பரப் படங்களில் நடித்தும், இன்றைக்கு இந்தியாவின் பெரும் பணக்கார நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.