மும்பை – சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று அம்மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று திங்கட்கிழமை காலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், சிவசேனாவின் மறைந்த தலைவர் பாலாசாஹேப் தாக்கரேயின் பேரனுமான ஆதித்ய தாக்கரே அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
சரத் பவாரின் உறவினரும், சில நாட்கள் அரசியல் பரபரப்பு நாடகத்தை மகராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேற்றியவருமான அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்பது இது நான்காவது தடவையாகும்.
விரிவுபடுத்தப்பட்டிருக்கும் மகராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சரவையில் 25 காபினெட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களும், 10 இணை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.